தேனி: தேனியில் 25 முதல் 100 சதவீதம் வரை சொத்து வரி உயர்வுக்கான தீர்மானம், முதல் கவுன்சில் கூட்டத்தில் நிறைவேறியது. இத்தீர்மானத்தைக் கண்டித்து அமமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
தேனி அல்லிநகரம் நகராட்சியில் கவுன்சில் கூட்டம் தலைவர் ரேணுப்பிரியா தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் வீரமுத்துக்குமார், மேலாளர் முனிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 33 கவுன்சிலர்களில் 9 திமுக கவுன்சிலர்கள், 2 அமமுக கவுன்சிலர்கள் மட்டுமே இந்த முதல் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
தீண்டாமை ஒழிப்பு உறுதி எடுக்கப்பட்டது. முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு தேனியில் முழு உருவச்சிலை வைக்கவேண்டும் என்ற முதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து பல்வேறு ஒப்பந்தப் பணிகள் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்பு அவசரக் கூட்டம் நடைபெற்றது. இதில், சொத்து வரி 2022 ஏப்ரல் 1-ம் தேதி முதல் உயர்த்தப்பட உள்ளது. 600, 1200, 1800, 1800 சதுர அடிக்கு மேல் என்று 4 வகைகளாகப் பிரிக்கப்பட்டு 25, 50,75,100 சதவீதம் வரி உயர்த்தப்படுகிறது. வணிக கட்டடங்களைப் பொறுத்தளவில் 100 சதவீதம் உயர்த்தபட உள்ளது என்ற தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. இவை கவுன்சில் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டது.
சொத்து வரி உயர்வைக் கண்டித்து அமமுக கவுன்சிலர்கள் ஜெயா,செல்வி ஆகியோர் வெளிநடப்பு செய்தனர். முதல் கூட்டத்தில் அதிமுக, காங்கிரஸ், பாஜக கவுன்சிலர்களும், துணைத் தலைவர் உள்ளிட்ட 10 திமுக கவுன்சிலர்களும் பங்கேற்கவில்லை. இதனால் மாற்றுக் கருத்துக்கள், மக்களின் அடிப்படைத் தேவை குறித்த விவாதமின்றி கூட்டம் களையிழந்து காணப்பட்டது.