தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு நாட்டில் தமது சொந்த ஊர்களுக்கு திரும்பவுள்ள மக்களுக்காக இன்று முதல் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அதன்படி தூரப்பிரதேசங்களுக்கான விசேட பேருந்து சேவை இன்று ஆரம்பிக்கப்படுவதாக போக்குவரத்துச் சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க அறிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இதன்போது வழமையாக சேவையில் ஈடுபடும் இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்துகளுக்கு மேலதிகமாக இந்த பேருந்துகள் சேவையில் ஈடுபட உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விசேட போக்குவரத்து திட்டத்திற்காக மேலதிகமாக 1,000 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரியவருகிறது.
எனினும், போதுமான அளவு டீசல் கிடைக்காவிட்டால் எதிர்வரும் 11 மற்றும் 12ஆம் திகதிகளில், தூரப்பிரதேசங்களுக்கு சேவையில் தனியார் பேருந்துகள் ஈடுபட மாட்டாதென இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ண தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களின் நலன்கருதி இன்று முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை தூர மற்றும் விசேட புகையிரத சேவைகளை மேற்கொள்ள புகையிரத திணைக்களம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.