இஸ்லாமாபாத்:’பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நிராகரித்தது சட்ட விரோதமானது’ என, பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
பார்லி., கலைப்பை ரத்து செய்துள்ள உச்ச நீதிமன்றம், நாளை மீண்டும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடத்த உத்தர விட்டுள்ளது.நம் அண்டை நாடான பாகிஸ்தானில், பிரதமர்இம்ரான் கானுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள்நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தாக்கல் செய்தன.கூட்டணி கட்சிகள் மற்றும் சொந்தக் கட்சி எம்.பி.,க்கள் பலர், இம்ரான் கானுக்கு எதிராக போர்க் கொடி துாக்கினர். இதையடுத்து, அவர் பெரும்பான்மை பலத்தை இழந்தார்.
கடந்த, 3ம் தேதி நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது பார்லிமென்டில் ஓட்டெடுப்பு நடப்பதாக இருந்தது. ஆனால், தீர்மானத்தை, துணை சபாநாயகர் காசிம் சுரி நிராகரித்தார். பிரதமரின் பரிந்துரையை ஏற்று, பார்லிமென்டை கலைத்து அதிபர் ஆரிப் அல்வி உத்தரவிட்டார்.
இந்த விவகாரங்கள் தொடர்பாக அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து, தலைமை நீதிபதி உமர் அடா பந்தியால் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அமர்வு விசாரித்து வந்தது.இந்நிலையில் உச்ச நீதிமன்ற அமர்வு அளித்த தீர்ப்பின் விபரம்: பார்லிமென்டில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிராகரித்த, துணை சபாநாயகரின் உத்தரவு சட்டவிரோதமானது. எனவே, பார்லி மென்டை கலைக்கும் முடிவும் சட்ட விரோதமானது.
அதனால் பார்லிமென்ட் கலைப்பு ரத்து செய்யப்படுகிறது.பிரதமர் இம்ரான் கான் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது பார்லிமென்டில் நாளை காலை 10:00 மணிக்கு விவாதம் நடத்தி, ஓட்டெடுப்பு நடத்தப்பட வேண்டும்.இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.இந்தத் தீர்ப்பு, பிரதமர் இம்ரான் கானுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
Advertisement