பொதுவழங்கல் முறையில் நியாயவிலைக்கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
2024 மார்ச் மாதத்துக்குள் இதைப் படிப்படியாக அனைத்து மாநிலங்களிலும், ஒன்றிய ஆட்சிப் பகுதிகளிலும் நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இத்திட்டத்தில் அரிசியைச் செறிவூட்ட ஆண்டுக்கு 2700 கோடி ரூபாய் செலவாகும் என்றும், அதை மத்திய அரசே ஏற்றுக்கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
முதற்கட்டமாக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், பிரதமர் ஊட்டச் சத்துத் திட்டம் ஆகியவற்றிலும், இரண்டாம் கட்டமாக வளர்ச்சி குன்றிய மாவட்டங்களில் பொது வழங்கல் திட்டத்திலும் நடைமுறைப்படுத்தப்படும். மூன்றாம் கட்டமாக 2024 மார்ச்சுக்குள் மீதமுள்ள மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்தப்படும்.
இரும்புச் சத்து, போலிக் அமிலம், விட்டமின்கள் ஆகிய நுண்ணூட்டங்களைச் சேர்த்த அரிசியே செறிவூட்டப்பட்ட அரிசி எனப்படுகிறது. இந்த அரிசியை உணவாகக் கொள்வதன் மூலம் இரத்தச் சோகை, ஊட்டச்சத்துப் பற்றாக்குறை ஆகியவற்றைப் போக்க முடியும்.