நியூ ஜென் பாடலாசிரியர்களுக்கு!

கண்மணிகளா, அன்போடு தமிழ் சினிமா ரசிகன் எழுதும் கடிதம்!. பொன்மணிகளா நீங்க அங்கு சௌக்யமா நான் இங்கு சௌக்யமே!

’காணவில்லை!’ என்று சில சமீப தமிழ் படங்கள்ல பல விஷயங்கள சொல்லலாம் – திரைக்கதை,  யதார்த்தமான நடிப்பு, பாடல் காட்சிகல தாண்டி வரும் ஹீரோயின், இன்டர்வல தாண்டி வரும் நண்பன்…இப்படி அடுக்கிட்டே போயி  கோபுரம் கட்டினால், அதுல  கலசம் மாதிரி என்ன  இருக்கும்  தெரியுமா? நல்ல பாடல் வரிகள்!

என்ன சொல்ல போகிறாய்

‘போயி ஒரு ஓரமா உக்காருங்க பூமர் அங்கிள்’. எப்போ பார்த்தாலும் அந்த காலத்துலலாம்னு வந்துட வேண்டியது. உங்க பாடல்கள் எல்லாம் ஒழுங்கா?’ அப்படீனு நீங்க சொல்றது எனக்கு கேக்குது.

கவனம்: நான் 90ஸ் கிட். அருவருப்பு பாடல்கள்(உங்க பாஷைல சொல்லணும்னா  ‘கிரிஞ்’)  பல இருந்தாலும், அத ஈடு செய்ய வேறு சில பாடல்கள் இருந்தது. ஒட்டகத்த கட்டினோம் ஆனா, கொட்டும் மழையில் உப்பும் வித்தோம். காடு-மேடு-பூக்கள் இருந்தாலும் காதலென்ற முடிவிலில நேரம் தெரியாம கஷ்டப்பட்டோம். பூ-வண்டு, மான்-தேன், வானம்-மேகம் இப்படி அரைச்ச மாவயே அரைச்சாலும், பசுவ பாம்புனு சாட்சி சொல்ல முடியாதுனு தெரிஞ்சுகிட்டோம். மே மாதம் 98ல மேஜர் ஆனோம், ஆனால்.. விடுங்க, இதுக்கு ஈடு  கடையாது. ஒண்ணுமே இல்லைனா ‘லா லா லா’ வெச்சு ஓட்டிட்டோம். உண்மைதான்.

ஆனால் இப்போ… ஒரு பக்கம் திரும்பினா அப்பன்-வெப்பன், இந்த பக்கம் திரும்பினா ராணி-போனி. போதும்பா சாமினு மூனாவது பக்கம் திரும்பினா நாட்டி-பியூட்டி. இல்ல  க்யூட்டி-ஸ்வீட்டி. ‘ஸ்டைலு-ஸ்மைலு’. தமிழும் ஆங்கிலமும் கலந்த ‘ரைமிங்’ வரிகள போட்டு நம்பல ‘வை திஸ் கொலவெறி’ னு கேக்க வைக்கிறாங்க.   நூறுல  இருநூறு பாடல்கள் காதல் சம்பந்தப்பட்டதா இருக்கு. சில பாடல்கள் எங்கள தள்ளிப்போகாதேனு  ஈர்த்தாலும், முக்கால் வாசி  பாடல்கள்ல  தீய வைக்கிறீங்க – புத்தில, வயசுல, மனசுல, உடம்புல – தீ அணைப்பு துறை எங்கப்பா போச்சு?.

‘யானை- முன்னே மணியோசை – பின்னே’ என்பது மாதிரி,  படம் வரும் முன்னாலயே படத்தோட பாடல்களும், பாடல்  மேக்கிங்கும் வந்துடுது. எப்படியாவது ‘வைரல்’ ஆகிடுது. உண்மைய சொல்லணும்னா இப்போ வரும் பாடல்கள் இசை  ‘கேட்சி’யா நல்லா தான் இருக்கு. இதுல என்ன எரிச்சல்னா அப்பப்போ நாம நம்பள அறியாமையே தல சீவும் போது ‘மானு-மானு-மானு, பேனு-பேனு-பேனு’ அப்படீனு முணுமுணுத்துடறோம். இல்ல பல் விலக்கும் பொழுது ‘பிட்டு-பிட்டா பைட்டு பைட்டா’னு பாடிடறோம். இத விட, ஐந்து ஆறு வயசு பசங்க கிஸ் பண்ணி சுகர ஏத்துறத பத்தி பாடும் போது நமக்கு ‘பிரஷர்’ ஏறும் பாருங்க – அப்போ தான் நம்ப சின்ன வயசுல ‘அப்பணோட சேமிப்பு கரையாம கல்யாணம் பண்ணலாம்’னு பாடும் போது வீட்ல எவ்வளவு எரிச்சல் ஏற்பட்டிருக்கும்னு புரியுது.

இப்போ யாரு வேணாலும் பாடல்கள் எழுதலாம். பல நேரம் ஹீரோக்களே பாடலாசிரியர் ஆகி விடுகிறார்கள். (இயக்குனர் தயாரிப்பாளர் ஆகும் பொழுது, தயாரிப்பாளர் இசை அமைக்கும் பொழுது, இசை அமைப்பாளர் ஹீரோ ஆகும் பொழுது, ஹீரோ பாடலாசிரியர் ஆக கூடாதா?). நல்ல விஷயம்தான். வெவ்வேறு விதமான சிந்தனைகள், ஐடியாக்கள் பாடல்களில் வெளிவரும். ஆனால் ‘டிரெண்டு டிரெண்டு’னு ஒரே மாதிரி எழுதி நம்பள ‘பெண்டு’ எடுக்கறீங்க. ஆங்கிலத்துல இன்னும் பல லட்சம் ‘ரைமிங்’ வார்த்தைகள் இருக்கு (உதாரணம்: டாலு-கோலு, ஹார்ட்டு-டார்ட்டு). இன்னும் பல வருஷம் அத வெச்சு சுலபமா ஓட்டிடலாம். ஆனால் கேட்கும் எங்களுக்கு தான் கஷ்டம்.

‘இப்போ என்ன பண்ணனும் அங்கிள்?’னு கேட்கறீங்களா. போயி தொல்காப்பியம், சீவக சிந்தாமணி இதெல்லாம் கரைச்சி குடிக்க வேண்டாம். விறு-விறுன்னு போயி இரட்டை கிளவி பத்தியோ, சட்டு-புட்டுன்னு போயி எதுகை பத்தியோ, ‘இரு இப்போவே!’ அப்படீன்னு மோனை பத்தியோ படிக்க வேண்டாம். நான் கேட்பதெல்லாம் கொஞ்சம் உவமை, கொஞ்சம் புதுமை. கொஞ்சம் மென்மை, கொஞ்சம் திறமை. ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் போகாது, அது போல ஒரு நாள்ல இந்த டிரெண்ட மாத்த முடியாது. கொஞ்சம் கொஞ்சமா மாறினாலும் போதும். மாறலனா இந்த மாதிரி பாடல்கள கேட்டு கேட்டு ‘மறு பிறவி வேண்டுமா?’னு  எங்கள நாங்களே கேட்டுப்போம்.

இப்படிக்கு,

கிருஷ்ணன் ரகு 

(ஒரு 90ஸ் கிட்)

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.