கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம், பிர்பூம் மாவட்டத்தில் உள்ள பர்ஷால் கிராமத்தில் பஞ்சாயத்து துணை தலைவராக இருந்த ஆளும் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த பகதூர் ஷேக், கடந்த 21ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து, கிராமத்தில் வெடித்த வன்முறையில் வீடுகளுக்கு ஒரு கும்பல் தீ வைத்தது. இந்த சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை சிபிஐ.யிடம் ஒப்படைக்கும்படி கொல்கத்தா உயர் நீதிமன்றம் கடந்த மாதம் 25ம் தேதி உத்தரவிட்டது.இந்நிலையில், பகதூர் கொலை வழக்குக்கும், 9 பேர் எரித்து கொல்லப்பட்ட வழக்குக்கும் தொடர்பு இருப்பதால், பகதூர் வழக்கின் விசாரணையையும் சிபிஐ.யிடம் ஒப்படைக்கும்படி கோரப்பட்டது. நீதிபதி பரத்வாஜ் அமர்வு இதை ஏற்று, பகதூர் கொலை வழக்கையும் சிபிஐ.க்கு மாற்றி நேற்று உத்தரவிட்டது.
