உக்ரைனிலிருந்து தப்பி வரும் இளம் பெண் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதாகக் கூறி, தங்கள் வீடுகளில் இடம் கொடுக்க வரும் பிரித்தானிய ஆண்கள் சிலர், அவர்களிடம் பாலியல் ரீதியான பதிலுதவியை எதிர்பார்ப்பதாக பரவலாக புகார் எழுந்துள்ளது.
உக்ரைனில் போருக்குத் தப்பி பிரித்தானியா வரும் அகதிகளுக்கு உதவும் நோக்கில் பிரித்தானிய அரசு திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, பிரித்தானியர்கள் தங்கள் வீடுகளில் கூடுதலாக உள்ள அறையை உக்ரைன் அகதிகளுக்குக் கொடுக்கலாம். அதற்காக அந்த பிரித்தானியர்களுக்கு ஒரு சிறு நிதி உதவியையும் அரசு செய்யும்.
ஆனால், இந்த திட்டம் அறிவிக்கப்பட்டதுமே, தனியாக வாழும் ஆண்கள் பலர், வயது வித்தியாசமின்றி இளம் பெண் அகதிகளுக்குத் தங்கள் வீடுகளில் இடமளிக்க முன்வந்துள்ளார்கள்.
அதுவே, சந்தேகத்துக்கிடமாக அமைந்த நிலையில், தற்போது தங்கள் வீடுகளில் இளம்பெண்களை தங்க வைக்க முன்வந்துள்ள ஆண்கள் சிலர், பதிலுக்கு அந்த இளம் பெண்களிடம் பாலியல் ரீதியான உதவியை எதிர்பார்ப்பதாக புகார் எழுந்துள்ளது.
ஆகவே, சில இளம்பெண்கள், தாங்கள் முன்பு யார் வீட்டில் தங்குவதற்காக விண்ணப்பித்தார்களோ, அதை ரத்து செய்துவிட்டு, பாதுகாப்பான வேறு ஒருவர் வீட்டில் தங்கும் வகையில் தங்களுக்கு உதவுமாறு உதவும் குழு ஒன்றிடம் கோரியுள்ளார்கள்.