வாஷிங்டன்:ரஷ்யா அதிபர் புடின் மகள்கள் மீது அமெரிக்கா நேற்று முன்தினம் விதித்த தடைகளுக்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது போர் தொடுத்ததால், ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இந்நிலையில் உக்ரைனின் புச்சா நகரில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்ட புகைப்படங்கள் வெளியானதும், அமெரிக்கா ரஷ்யா மீது புதிய தடைகளை விதித்துள்ளது.இதன்படி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் மகள்கள் கேத்தரினா, மரியா இருவரின் வங்கிக் கணக்குகள், அமெரிக்காவில் உள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
தொழில்நுட்ப அதிகாரியான கேத்தரினா, ரஷ்ய அரசு மற்றும் ராணுவத்தின் செயல்பாடுகளுக்கு பக்கபலமாக இருந்து வருகிறார். உயிரியல் ஆய்வாளரான மரியா, மரபணு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். இவரது திட்டங்களுக்கு ரஷ்ய அரசு கோடிக்கணக்கில் பணம் வழங்குகிறது.
கேத்தரினா, மரியா இருவர் வாயிலாகத்தான், புடின் வெளிநாடுகளில் ஏராளமான சொத்துக்களை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. புடினின் நீண்ட கால நண்பரின் மகனை கேத்தரினா திருமணம் செய்துள்ளார். இவர்கள் தங்களுக்கு, 15 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து உள்ளதாக கூறியுள்ளனர். மரியாவின் கணவருக்கு ரஷ்யாவின் காஸ்ப்ரம் வங்கியுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது.
இவ்வங்கிக்கும் ரஷ்ய தலைவர்களுக்கும் அதிக நெருக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. நெதர்லாந்தில் வசிக்கும் மரியாவின் சொத்து விபரம் இன்னும் வெளியாகவில்லை.புடின் குடும்பத்தினருக்கு அமெரிக்கா தடை விதித்ததன் வாயிலாக அவரது பணப்பரிவர்த்தனைகளை கட்டுப்படுத்த அந்நாடு முயற்சிப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
Advertisement