எக்ஸ்இ என்ற புதிய வகை ஒமைக்ரோன் கொரோனா வைரஸ் பற்றி பயப்படத்தேவை இல்லை என்று பிரபல மருத்துவ நிபுணர் ககன் தீப் கூறி உள்ளார்.
இந்த வைரசு இங்கிலாந்தில் மிகவேகமாக பரவிக்கொண்டு இருக்கிறது. இது இந்தியாவில் பரவி 4-வது அலையை உருவாக்கி விடுமோ என்ற அச்சம் சிலரது மனதில் எழுந்துள்ளது.
ஒமைக்ரோன் வைரஸ் பிரிவுகளின் பிஏ1 மற்றும் பிஏ2 ஆகிய 2 வைரஸ்களின் கலவையாக எக்ஸ்இ வைரஸ் உருவாகி இருக்கிறது.
இது வேகமாக பரவும் என்பது உண்மைதான். ஆனால் அதற்காக அந்த வைரசை நினைத்து கவலைப்பட வேண்டியதில்லை.
கொரோனா வைரஸ் தொடக்கத்தில் இருந்தே பல்வேறு உருமாற்றங்களை பெற்று வருகிறது. அதில் ஒரு சாதாரண உருமாற்றம் தான் எக்ஸ்இ வைரஸ்.
கொரோனா வைரஸ்களில் டெல்டாபிளஸ் வைரஸ் தான் மிக அதிக உயிரிழப்பை ஏற்படுத்தியது. ஆனால் எக்ஸ்இ வைரஸ் சாதுவானது. அது எந்த ஆபத்தையும் ஏற்படுத்த போவதில்லை. எனவே எக்ஸ்இ வைரசால் மிகப் பெரிய ஆபத்து ஏற்பட வாய்ப்பே இல்லை அவர் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
எனவே மக்கள் வழக்கம் போல இயல்பான நிலையில் இருக்கலாம். பிஏ2 வைரஸ் தான் சற்று பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கவலை இருக்கிறது. அதில் இருந்து உருமாற்றம் பெற்றுள்ள எக்ஸ்இ பற்றி பயமில்லை.
மேலும் இந்தியாவில் கணிசமானவர்கள் தடுப்பூசி செலுத்துக்கொண்டுள்ளனர். எனவே எல்லோரையும் புதிய உருமாற்ற கொரோனா வைரஸ்கள் பாதிக்காது. ஒமைக்ரானை விட 10 மடங்கு அதிகமாக எக்ஸ்இ வைரஸ் பரவும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால் தடுப்பூசி செலுத்தி இருப்பவர்கள் மத்தியில் அதன் பாதிப்பு இருக்காது. தடுப்பூசி செலுத்தாதவர்களை தான் இந்த வைரஸ் பாதிக்க வாய்ப்புள்ளது. தற்போது உலகம் முழுக்க இயல்பு நிலை வந்துவிட்டது. வைரஸ்கள் போகும், வரும் அதை பற்றி இனி மக்கள் கவலை கொள்ள தேவையில்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.