சென்னை: பெண் பத்திரிகையாளரை அவமதிக்கும் வகையிலான பதிவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த வழக்கில், பாஜக உறுப்பினரும், நடிகருமான எஸ்.வி. சேகர் உயர்நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.
கடந்த 2018-ஆம் ஆண்டு தனது முகநூல் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறான கருத்து ஒன்றை நடிகரும், பாஜக ஆதரவாளருமான எஸ்.வி.சேகர் பகிர்ந்திருந்தார். இது சர்ச்சையானது. எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இதைத்தொடர்ந்து தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் மிதார் மொய்தீன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இதுதொடர்பாக எஸ்.வி.சேகர் மீது, 3 பிரிவுகள் மற்றும் பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் ஒரு பிரிவு என 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை எதிர்த்து, எஸ்.வி.சேகர் தரப்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு திபதி என்.சதீஷ்குமார் முன்னிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த விசாரணையின்போது, எஸ்.வி.சேகர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கலிஃபோர்னியாவில் உள்ள திருமலை சடகோபன் என்பவர் பக்தி மற்றும் தேசப்பற்று தொடர்பாக அனுப்புபவர் என்பதால், அதைபோல நினைத்து அவர் 2018 ஏப்ரல் 19-இல் எழுதியதை ஃபார்வேர்ட் மட்டுமே செய்ததாகவும், பின்னர் பெண் பத்திரிகையாளர்கள் குறித்த அவதூறு என தெரியவந்ததால், உடனடியாக ஏப்ரல் 20-ஆம் தேதியே நீக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக காரசாரமனா விவாதங்கள் நடைபெற்றது. இதுபோன்ற தகவலை எஸ்.வி.சேகர் பதிவிடவில்லை என்றாலும், அதை ஃபார்வேர்ட் செய்திருப்பதும் குற்றம்தான் என்பதால், அவர் மீதான வழக்கை ரத்துசெய்யக்கூடாது என மனுதாரர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதி, முகநூலில் வந்த தகவலை படிக்காமல் ஃபார்வேர்ட் செய்துவிட்டேன் என கூறுவதற்கு எஸ்.வி.சேகர் எழுதப்படிக்க தெரியாதவரா என கேள்வி எழுப்பினார். சமூகத்தை எப்படி மதிக்கவேண்டும் என புரிந்துகொள்ளமுடியாத இவர்கள் எப்படி முக்கிய பிரமுகர் என சொல்லிக்கொள்கிறார்கள் எனவும் கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து இன்று நடைபெற்ற விசாரணையின்போது, நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு தவறு செய்ததற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் மன்னிப்பு கேட்க தனக்கு ஒன்றும் வெட்கமில்லை என்றும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, 4 வழக்குகளிலும் தனித்தனியாக பிராமணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு ஏப்ரல் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.