இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால். அத்தியாவசிய பொருள்களின் விலை கடுமையாக அதிகரித்து, சாமான்ய மக்கள் வாழ வழியின்றி மற்ற நாடுகளுக்கு கடல் வழியாக தப்பிச்சென்று அகதிகளாக நுழைந்து வருகின்றனர்.
அதன்படி ஏற்கெனவே இலங்கையிலிருந்து இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 16 நபர்கள் கடந்த மாதம் கள்ளப் படகு மூலம் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் அகதிகளாக நுழைந்தனர். அவர்கள் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையிலிருந்து தமிழகத்திற்குள் அகதிகள் நுழைவதை தடுத்து நிறுத்த இலங்கை கடற்படையின் அதி தீவிர ரோந்து காரணமாகவும், இந்தியக் கடலோர காவல்படையின் ரோந்து பணியின் காரணமாகவும் அகதிகளின் வருகை தடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இன்று தனுஷ்கோடி அடுத்த கம்பிபாடு கடல் பகுதியில் இலங்கையிலிருந்து அகதிகளாக 4 பேர் வந்துள்ளதாக கடற்படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தியதில், இலங்கை முத்தரிப்பு துறையைச் சேர்ந்த கணவன் மனைவியான அந்தோணி நிஷாந்த், பெர்னடோ ரஞ்சிதா மற்றும் அவர்கள் குழந்தைகள் இருவர் என்பது தெரியவந்தது.
இலங்கையில் விலைவாசி உயர்வை சமாளிக்க முடியாமல் படகு மூலம் தமிழகத்திற்கு அகதிகளாக நுழைந்திருப்பதாக அவர்கள் போலீஸாரிடம் தெரிவித்தனர். இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து தலைமன்னார் வந்து, பின்னர் அங்கிருந்து ஃபைபர் படகில் தனுஷ்கோடி வந்தடைந்துள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவர்களை மண்டபம் கடற்படை காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.
பின்னர் பெர்னடோ ரஞ்சிதா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். “இலங்கையில் விலைவாசி ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது . நாங்கள் கடல் கூலித் தொழில் செய்து வருகிறோம். டீசல் தட்டுப்பாட்டால் கடலுக்குச் செல்ல இயலவில்லை. கரண்ட், டீசல் தட்டுப்பாடால் எந்த கூலி வேலைக்கும் செல்ல முடியவில்லை. அத்தியாவசியப் பொருள்கள் தட்டுப்பாடு, அப்படியே பொருள்கள் இருந்தாலும் விலைவாசி அதிகமாக உள்ளது. அதனால் வாங்கப் பணமில்லாமல் தவித்து வருகிறோம். வியாபாரிகள் அனைவரும் அவரவர் இஷ்டத்துக்கு விலை வைத்து விற்கிறார்கள். படிக்கக்கூடிய என் பிள்ளைகளை ஒழுங்காகப் பள்ளிக்குக் கூட அனுப்ப முடியவில்லை, பள்ளியும் இயங்குவதில்லை.
இதுக்கு மேல் எங்களால் அங்கு சமாளிக்க முடியவில்லை. எங்களைப்போல கஷ்டப்படுற குடும்பங்கள் அங்கு வாழவே முடியாமல் தவித்து வருகின்றனர். சரி குழந்தைகள் உயிரையாவது காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, போனால் கடலோடு போவோம், தப்பிபோனால் வேறெங்காவது போவோம் என உயிர் பயத்துடன் கடல்வழியாக வந்திருக்கிறோம்” என்று வேதனையுடன் கூறினார்.
இதையடுத்து அவர்களை கடற்படை போலீஸார் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைத்துள்ளனர்.