சென்னை: அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டிருந்தாலும் அம்மா உணவகம் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அந்தந்த மாநகராட்சிகளில் இருந்து அதற்கு நிதி ஒதுக்கப்படுகிறது என்று சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடந்தது.
இதை தொடங்கிவைத்து பேசிய எதிர்க்கட்சி கொறடாஎஸ்.பி.வேலுமணி, ‘‘உள்ளாட்சிதுறைகளுக்கு இந்த நிதிஆண்டில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி போதுமானதாக இல்லை. கூடுதல் நிதி ஒதுக்கப்பட வேண்டும். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கடந்த 2013-ம் ஆண்டு தொடங்கப்பட்ட அம்மா உணவகங்களுக்கு கடந்த 2020-21 ஆண்டில் அப்போதைய முதல்வர் பழனிசாமி ரூ.100 கோடி ஒதுக்கினார். ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு,2021-22 மற்றும் 2022-23 ஆண்டுகளின் பட்ஜெட்டில் இதற்கு நிதிஒதுக்கப்படவில்லை. இந்த திட்டத்தை முடக்கும் வகையில் அரசு செயல்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது. அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படுமா என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்’’ என்றார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, ‘‘கடந்த ஆட்சியில் நடந்த எந்த பணியும் முடக்கப்படவில்லை. அம்மா உணவகத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கியதாக கூறினீர்கள். அதேபோல,இப்போதும் அந்த உணவகங்களுக்கான தொகையை அந்தந்த மாநகராட்சிகளில் இருந்து பெற்று, நிறுத்தாமல் இத்திட்டத்தை தொடரவேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அம்மா உணவகம் திட்டம் அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டிருந்தாலும், நிறுத்தப்படாமல் தொடரும்’’ என்றார்.