போலீஸ் காரராக பணிபுரியும் கணவனுடன் சண்டையிட்டு குழந்தையுடன் தாய்வீட்டுக்கு சென்ற பெண் ஒருவர், தாயுடன் ஏற்பட்ட தகராறில் தனது குழந்தையை அடித்து துன்புறுத்திய வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விவாகரத்தை காரணம் காட்டி குழந்தைக்காக தந்தையும் வாய்திறக்க மறுக்கும் பரிதாபம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..
புதுச்சேரியில் காவலராக பணிபுரிந்து வருபவர் கணேஷ். இவரது மனைவி சாந்தி இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ள நிலையில் எதற்கு எடுத்தாலும் குரலை உயர்த்தி கணவனிடம் சண்டையிடும் சாந்தி கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக கணவரிடம் கடுமையாக சண்டையிட்டு விட்டு தனது பெண் குழந்தையுடன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு சென்ற பின்னரும் சாந்தி அடையாமல் தினமும் தாயிடம் குரலை உயர்த்தி சண்டையிடுவதையும் , தாயின் மீதான ஆத்திரத்தை எந்த தவறும் செய்யாத தனது பெண் குழந்தை மீது காட்டுவதையும் வழக்கமாக்கி உள்ளார். தன் மகளின் இந்த கொடுமையை கண்டு சகிக்க இயலாமல் வரது தாய் வேதனை அடைந்துள்ளார்.
சம்பவத்தன்று இரவு இதே போல படுக்கைக்கு சென்ற நிலையில் தாய் மீதான ஆத்திரத்தால் அருகில் இருந்த குழந்தையை சரமாரியாக அடித்து படுக்க வைத்த சம்பவம் அரங்கேறி இருக்கின்றது.
இதனை தனது செல்போனில் படம் பிடித்த சாந்தியின் தாய் அந்த வீடியோவை, உறவினர் ஒருவர் மூலமாக போலீஸ் காரரான தந்தைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகிவரும் நிலையில் போலீஸ் காரரான கணேசனிடம் , கேட்ட போது, யாரோ ஒரு குழந்தைக்கு நிகழ்ந்த சம்பவம் போல பேசிய அவர், இது பற்றி கருத்து தெரிவித்தால் தனது மனைவி தன் மீது ஆத்திரம் அடைந்து விவாகரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி விடுவார் என்று பதறிய கணேசன், மனைவியின் உறவினர் தான் இந்த வீடியோவை முதலில் தனக்கு அனுப்பி வைத்ததாக தெரிவித்தார்.
போலீஸ் காரர் கணேசனுக்கும், தாய் சாந்திக்கும் மகளாக பிறந்ததை தவிர வேறு என்ன பாவம் செய்தோம், ஏன் அடி வாங்குகிறோம் என்று தெரியாமலேயே தினமும் சரமாரியாக அடிவாங்கிக் கொண்டிருக்கும் அந்த 5 வயது சின்னஞ்சிறுமி மனரீதியாக பாதிக்கப்படும் முன் குழந்தைகள் நல அதிகாரிகள் மீட்டு தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் ஆதங்கமாக உள்ளது.