கேரள மாநிலம் இடுக்கியில் 1895ஆம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டது. இதன் பராமரிப்பு பணிகள் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்நிலையில் முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பான ரிட் மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எம். கான்வில்கர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. கேரளா அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், முல்லைப் பெரியாறு அணையில் நீரைத் தேக்கிவைக்கும் அளவை அதிகரிக்க மத்திய அரசு அமைத்த நிபுணர் குழு அளித்த பரிந்துரை விவாதமாகியுள்ளது.
முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக இல்லை. முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு தேக்கி வைக்கப்படும் நீரின் அளவைப் பொறுத்து உள்ளது. அணையின் அதிக அளவில் நீரை தேக்கி வைக்கப்படுகிறது. இந்த விவகாரம் நீர் பங்கீடு தொடர்புடையதல்ல. அணை பாதுகாப்பு தொடர்புடையது. தமிழகம், கேரளத்தை சேர்ந்த தொழில்நுட்பம் சார்ந்த உறுப்பினர்களை கொண்டு முல்லைப் பெரியாறு அணையின் கண்காணிப்பு குழுவை மாற்றியமைக்க வேண்டும்.
இந்த விவகாரத்திற்கு நிரந்தர தீர்வு காண புதிய அணை கட்டுவதே கேரள அரசின் நிலைப்பாடாக உள்ளது. ஆனால் புதிய அணை கட்டுவதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது என வாதிட்டனர்.
இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பான ரிட் மனுக்கள் மீதான வாதங்கள் நிறைவு பெற்றது. இன்று இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.