முஸ்லீம் பெண்களைக் கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்வோம் என்று ஒரு சாமியார் பொது வெளியில் பகிரங்கமாக மிரட்டிய சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஹரித்வாரில் கடந்த டிசம்பர் மாதம் 3 நாள் தர்ம சன்சத் என்ற இந்து மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட யதி நரசிங்கானந்த் என்ற சாமியார் முஸ்ம்களுக்கு எதிராக துவேஷத்துடன் பேசினார். அவர்களை இனப்படுகொலை செய்ய வேண்டும். ராணுவம், காவல்துறை, பொதுமக்கள் இணைந்து இதைச் செய்ய வேண்டும் என்று அவர் பேசினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நீண்ட தாமதத்திற்குப் பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் தற்போது உத்தரப் பிரதேச மாநிலம் சித்தாப்பூர் மாவட்டம் கைராபாத் என்ற இடத்தில் ஒரு சாமியார் முஸ்லீம் பெண்களை கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்வோம் என்று பேசியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் லக்னோவிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்த கைராபாத். இங்குள்ள மசூதி அருகே திரண்ட கூட்டத்தில் ஒரு சாமியார் பேசினார். அவர் உள்ளூரைச் சேர்ந்த சாமியார். ஒரு ஜீப்பில்அமர்ந்தபடி அவர் பேசினார். அவரது ஜீப்புக்கு அருகே ஒரு போலீஸாரும் நின்றிருந்தனர். ஒலிபெருக்கி வழியாக அந்த சாமியார் பேசுகையில், மத ரீதியாக கலவரத்தையும், வெறுப்பையும் தூண்டும் வகையில் பேசினார். அவரது பேச்சை அங்கு கூடியிருந்த கும்பல், ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் போட்டு வரவேற்று கைதட்டி ரசித்துக் கேட்டது.
சாமியார் தொடர்ந்து பேசுகையில், இந்தப் பகுதியில் உள்ள இந்துப் பெண்களுக்கு முஸ்லீம்கள் ஏதாவது தீமை செய்தால், அவர்கள் வீட்டு பெண்களை நாங்கள் கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்வோம் என்று அவர் கூறியபோது கூட்டம் ஆரவாரமாக கைதட்டி அதை வரவற்றது.
இந்த வீடியோவை தனது ஆல்நியூஸ் இணையதளத்தில் ஷேர் செய்துள்ள அதன் இணை நிறுவனர் முகம்மது சுபைர் கூறுகையில், ஏப்ரல் 12ம் தேதி இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்து 5 நாட்களாகியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.
இவர் வெளியிட்டிருந்த டிவீட் குறித்து விளக்கம் அளித்துள்ள சித்தாப்பூர் போலீஸார், இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் விசாரணை நடத்தி வருகிறார். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதற்கிடையே, அந்த சாமியாரின் பெயர்
பஜ்ரங் முனி
என்று தெரிய வந்துள்ளது. இவருக்கு கோபக்கார சாமியார் என்றும் ஒரு பெயர் உண்டாம். இவர் மீது ஏகப்பட்ட சர்ச்சைகளும் உள்ளூரில் உள்ளன. அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. அவர் குறித்து ஐ.நா. மனித உரிமை அமைப்பு, தேசிய மகளிர் ஆணையம் ஆகியவற்றுக்கும் கோரிக்கைகள் குவிந்து வருகின்றன.