குமாரசாமி லே –தொழிலதிபர் வீட்டில் இரண்டு கோடி ரூபாய் திருடிய இருவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அந்த தொழிலதிபரிடம் இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது என வருமான வரித்துறை, அமலாக்க துறைக்கு போலீசார் புகார் செய்துள்ளனர். அவர்கள் கிடுக்கிப்பிடி விசாரணையை துவக்கியுள்ளனர்.பெங்களூரு குமாரசாமி லே – அவுட்டை சேர்ந்தவர் சந்தீப் லால், 45. மத்திய பிரதேசத்தை சேர்ந்த தொழிலதிபரான இவர், கடந்த மாதம் 28ல் சென்னை சென்றிருந்தார்.அப்போது இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த திருடர்கள் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.இது குறித்து குமாரசாமி லே – அவுட் போலீசில் புகார் செய்யப்பட்டது. ஆரம்பத்தில் நகைகள் மட்டுமே காணாமல் போனதாக புகாரில் கூறியிருந்தார். பின் இரண்டு கோடி ரூபாய் திருட்டு போனதாக கூறினார்.கைரேகை திருட்டு நடந்த வீட்டில் போலீசார் தடயங்களை சேகரித்தபோது, அங்கு பதிவாகி இருந்த கைரேகை ஏற்கனவே திருட்டு வழக்கில் கைதாகி இருந்த சுனில், 35 என்பவரின் கை ரேகையுடன் ஒத்து போயிருந்தது.இது சம்பந்தமாக விசாரித்த போலீசார், சுனில், திலீப், 39 ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1.76 கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.விசாரணையில் கிடைத்த தகவல்கள்:ஆட்டோ டிரைவரான சுனில், ஏற்கனவே திருட்டு வழக்கில் கைதாகி சிறை சென்றவர். ஜாமினில் வந்தவுடன், வக்கீலுக்கு பணம் கொடுப்பதற்காக மீண்டும் திருட்டில் ஈடுபட முடிவு செய்தார். அதற்காக பூட்டியிருந்த வீடுகளை நோட்டம் விட்டார்.சொகுசு கார் தொழிலதிபர் சந்தீப்பின் வீட்டுக்கு, இவரது ஆட்டோவில் ஒருவர் சென்றார். அவரிடம் சந்தீப் தந்தை மனோகர் லால், கட்டுக்கட்டாக பணம் கொடுப்பதை பார்த்தார். வீட்டில் சொகுசு கார், இரு சக்கர வாகனங்கள் இருந்தன.இதனால் சந்தீப்பின் வீட்டில் திருட சுனில் முடிவு செய்தார். தொழிலதிபரை 15 நாட்கள் பின் தொடர்ந்து அவரது நடவடிக்கைகளை கண்காணித்தார். கடந்த மாதம் 28ல் அவர் வீட்டில் இல்லாததை தெரிந்து கொண்ட சுனில், தன் சிறை நண்பரான திலீப்பை சேர்த்து கொண்டு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து தேடினர்.முதலில் அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. திரும்ப நினைத்தபோது, வீட்டின் மேல்பகுதியில், நான்கு மூடைகள் இருப்பதை பார்த்தனர். அதை பிரித்து பார்த்த போது இரண்டு கோடி ரூபாய் இருந்தது. இதை பார்த்து ஆனந்தத்தில் துள்ளி குதித்தனர்.பின் அங்கிருந்த வெளிநாட்டு மதுபானத்தை அருந்தி விட்டு தப்பி சென்றனர். கடனை அடைத்தது உட்பட பல வழிகளில் ஒரு வாரத்தில் 24 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளனர்.போலீசில் சிக்கியதும் அவர்களிடம் இருந்த, 1.76 கோடி ரூபாய், 188 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.இவ்வாறு அந்த தகவல் கள் தெரிவிக்கின்றன.இதற்கிடையே, தொழிலதிபர் வீட்டில் ரொக்கமாக இரண்டு கோடி ரூபாய் பணம் எப்படி வந்தது என்பது குறித்து போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. வருமான வரித்துறை, அமலாக்க துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.வருமான வரித்துறையினர் உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை வாங்கி செல்லுமாறு உத்தர விட்டுள்ளனர். உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்காவிட்டால் அமலாக்க துறையினர் வழக்கு பதிவு செய்வர்.தொழிலதிபரோ, ‘நான் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறேன். அதற்கான ஆவணங்கள் உள்ளன. அதை காண்பித்து பணத்தை பெற்று கொள்வேன்’ என்கிறார்.
Advertisement