புதுடெல்லி: வங்கி மோசடி தொடர்பாக காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லாவிடம் அமலாக்கத் துறையினர் நேற்று விசாரணை நடத்தினர்.
ஜம்மு – காஷ்மீர் வங்கியில் காஷ்மீரின் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கோடிக் கணக்கில் பணம் மோசடி செய்தததாகவும் இந்தப் பணம் தீவிரவாதிகளுக்கு சென்றதாகவும் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக ஜம்மு காஷ்மீர் வங்கியின் தலைவர் பர்வேஸ் கடந்த 2019-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். பண மோசடி தொடர்பாக அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான உமர் அப்துல்லாவிடம் டெல்லியில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து தேசிய மாநாட்டுக் கட்சி ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘‘வங்கி மோசடி தொடர்பான விசாரணைக்கு டெல்லி வருமாறு உமர் அப்துல்லாவை அமலாக்கத் துறையினர் அழைத்தனர். இது அரசியல் காழ்ப்புணர்வோடு மேற்கொள்ளப்படும் நடவடிக்கை. எனினும் விசாரணைக்கு உமர் அப்துல்லா ஒத்துழைப்பு அளிப்பார். இந்த விவகாரத்தில் அவர் எந்தத் தவறும் செய்யவில்லை’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.