திருவனந்தபுரம்:
நடிகர் வடிவேலு தலைநகரம் என்ற படத்தில் நானும் ரவுடி தான் என்றும், என்னை கைது செய்யுங்கள் என்று போலீசாரிடம் கூறி ரகளை செய்யும் காமெடி காட்சி இடம் பெற்றிருக்கும்.
இது போன்ற சம்பவம் கேரள மாநிலம் சித்தார் பகுதியில் நேற்று நடந்தது. இப்பகுதியை சேர்ந்த பஸ் டிரைவர் ஷாஜிதாமஸ் (வயது40) என்பவர் அந்த வழியாக சென்ற தனியார் பஸ் மீது கல்வீசினார்.
பஸ் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து போலீசார் ஷாஜிதாமசை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.
போலீஸ் நிலையத்தில் அவரிடம் விசாரணை நடத்திய போலீசாரிடம், ஷாஜிதாமஸ் நான் ரவுடி, என்னை கைது செய்யுங்கள் என்று கூறினார். இதைக்கேட்ட போலீசார் சிரித்துக் கொண்டே அவருக்கு அறிவுரை கூறினர்.
இதைக்கேட்டதும் ஆத்திரம் அடைந்த ஷாஜிதாமஸ், நான் ரவுடி என்பதை உங்களுக்கு புரிய வைக்கிறேன் என்று கூறியபடி போலீஸ் நிலையத்தில் இருந்த கம்ப்யூட்டர் மற்றும் பொருட்களை அடித்து உடைத்தார்.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதற்கிடையே ஷாஜிதாமஸ் போலீஸ் நிலையத்தில் ரகளையில் ஈடுபடும் காட்சிகளை சிலர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இந்த காட்சிகள் வைரலானது. இதையடுத்து போலீசார் ஷாஜிதாமசை கைது செய்தனர். அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.