வரும் 14ல் நடக்கிறது கரக உற்சவம்| Dinamalar

பெங்களூரு-கொரோனாவால் இரண்டு ஆண்டுகளாக சாதாரணமாக கொண்டாடப்பட்ட, வரலாற்று பிரசித்தி பெற்ற பெங்களூரு கரக உற்சவம், இம்முறை ஆடம்பரமாக கொண்டாடப்படவுள்ளது. வழக்கம் போல் கரகம், மஸ்தான் சாப் தர்காவுக்கு செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பெங்களூரு கரக உற்சவம், பல நுாற்றாண்டு வரலாறு கொண்டதாகும். ஆண்டு தோறும் ஏப்ரலில், கரக உற்சவம் நடப்பது வழக்கம்; லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர்.இரண்டு ஆண்டுகளாக, கொரோனா முட்டுக்கட்டை போட்டது; எளிமையாக நடந்தது. கோவிலில் சம்பிரதாப்படி பூஜைகள் நடந்தன.தற்போது தொற்று குறைந்துள்ளதால், இம்முறை பெங்களூரு கரக உற்சவம் வரும் 14ல் ஆடம்பரமாக நடக்கவுள்ளது. வழக்கமாக திகளரபேட்டின் தர்மராய சுவாமி கோவிலில் இருந்து புறப்படும் கரகம், மஸ்தான் சாப் தர்காவுக்கு செல்லும்.தற்போது மாநிலத்தில் ஹலால் உட்பட சில விவாதங்கள் நடக்கின்றன. எனவே கரகம், தர்காவுக்கு செல்லுமா, செல்லாதா என்ற சந்தேகம் எழுந்தது.சூழ்நிலையை உணர்ந்த முஸ்லிம் மத தலைவர்கள், தர்மராயசுவாமி கோவிலுக்கு சென்று, கரக உற்சவ கமிட்டியினரை சந்தித்தனர். இம்முறையும் கரகம், மஸ்தான் சாப் தர்காவுக்கு வர வேண்டும் என, வேண்டுகோள் விடுத்தனர்.’நாம் பல ஆண்டுகளாக சகோதரர்களாக உள்ளோம். சமீப நாட்களாக நடந்துள்ள சில சம்பவங்களால் கரக உற்சவம் பாதிக்கக்கூடாது. ஒற்றுமையாக கரக உற்சவத்தை நடத்தலாம்’ என, கேட்டுக்கொண்டனர்.இதை, கரக உற்சவ கமிட்டியினர் ஏற்றுக்கொண்டனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.