தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள இலுப்பையூரணியைச் சேர்ந்தவர் குருவம்மாள். இவர் கணவர் மணிமுருககுமார் உடல்நலக்குறைவால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். இரண்டு மகன்கள் இருந்த போதிலும், 67 வயதானக் குருவம்மாள் தனியாகவே வசித்து வருகிறார். கல்குவாரியில் வேலைப் பார்த்து அதில் கிடைக்கும் வருவமானத்தில் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில், தன் வலது காலில் அடிக்கடி வலி ஏற்பட்டதால் கோவில்பட்டியிலுள்ள மாவட்ட அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
அவரைப் பரிசோதனை செய்த அரசு மருத்துவர் சீனிவாசகன், காலில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளாராம். இதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் 22-ம் தேதி குருவம்மாள் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். அவருக்கு இந்த மாதம் 4-ம் தேதி மருத்துவர் சீனிவாசகன் தலைமையில் காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
மயக்கம் தெளித்த பின்னர் குருவம்மாள் தன் காலைப் பார்த்த போது, இடது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்து, “வலது காலுக்கு பதில், இடது காலுல ஆபரேஷன் செஞ்ட்டாங்க” எனக் கூச்சலிட்டு அழுது புலம்பியுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மூதாட்டி குருவம்மாளிடம் பேசினோம், “வலது காலுல வலி என வந்த எனக்கு, இடது காலுல ஆபரேஷன் செஞ்சுட்டாங்க.
டாக்டருக்கிட்ட கேட்டதுக்கு, `ஒன்னும் பிரச்னை இல்ல. இடது காலுல கட்டி இருந்ததுனால அந்தக் காலுல ஆபரேஷன் செஞ்சிருக்கோம். வலது காலுல கொஞ்ச நாள் கழிச்சு திரும்ப ஆபரேஷன் பண்ணிடுவோம் பாட்டியம்மா”னு ரொம்பக் கூலா சொல்றாரு. என்னோட இடது காலுல எந்தக் கட்டியும் கிடையாது. அப்படியே இடது காலில் கொழுப்பு கட்டி இருந்தாலும், அந்த விஷயத்தை எங்கிட்டச் சொல்லி ஆபரேஷன் செஞ்சிருக்கலாம்.
இத்தனை நாள் என்னோட காலை பரிசோதிச்ச டாக்டருக்கு கொழுப்புக்கட்டி இருந்தாத் தெரியாதா? ஆபரேஷன் பண்ணும் போதுதான் கண்ணுக்குத் தெரியுமா? இப்போ 2 காலுலயும் வலி கடுமையா இருக்கு. சரியா நடக்க முடியல” என்றார் கண்ணீருடன்.
இது குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவர் சீனிவாசகனிடம் பேசினோம், “அந்த பாட்டியம்மாவுக்கு இடது காலில் கொழுப்பு கட்டி இருந்தது. அதனாலதான் அதனை அறுவை சிகிச்சை செய்து ஆய்வுக்கு அனுப்பி இருக்கோம். இதில் எந்தப் பிரச்னையும் இல்ல. விரைவில் மற்றொரு காலிலும் ஆபரேஷன் செய்யப் போறோம். இதை தேவையில்லாம சிலர் பெருசு படுத்துறாங்க” என்றார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட சுகாதரப் பணிகள் துனை இயக்குநர் முருகவேலிடம் பேசினோம். “பாதிக்கப்பட்ட குருவம்மாளிடம் விசாரணை நடத்தியிருக்கிறோம். அறுவை சிகிச்சை தொடர்பாக நோயாளியிடம் தகவல் தெரிவிக்காதது உள்ளிட்ட சில காரணங்களுக்காக முதற்கட்டமாக அந்த மருத்துவரை ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனைக்கு பணியிடமாற்றம் செய்துள்ளோம். தொடர்ந்து விசாரனை நடந்து வருகிறது. விசாரணை அறிக்கையை அரசுக்கு அனுப்பவிருக்கிறோம்” என்றார்.