விருதுநகர்:
விருதுநகரில் 22 வயது மதிக்கத்தக்க இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் ஹரிஹரன், மாடசாமி, பிரவீன், ஜூனத் அகமது மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் என 8 பேர் கைது செய்யப்பட்டனர். ஹரிஹரன் உள்ளிட்ட 4 பேர் மதுரை மத்திய ஜெயிலிலும், பள்ளி மாணவர்கள் 4 பேர் சிறுவர்கள் என்பதால் மதுரையில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்திலும் அடைக்கப்பட்டனர்.
இளம்பெண் பாலியல் வன்கொடுமை தொடர்பாக விருதுநகர் பாண்டியன் நகர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டிருந்தது. பின்னர் முதலமைச்சர் உத்தரவின் பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து கைது செய்யப்பட்ட 8 பேர் மீதும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 6 பிரிவுகளில் வழக்குப் பதிந்து விசாரணையைத் தொடங்கினர்.
முதலில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தினார்கள். இதையடுத்து மதுரை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த ஹரிஹரன், மாடசாமி, பிரவீன், ஜூனத் அகமது ஆகிய 4 பேரையும் 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்டது.
அவர்களை பாலியல் வன்கொடுமை நடந்த மருந்து குடோன் உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் அழைத்து சென்றும் விசாரணை நடத்தினார்கள். அதில் பல்வேறு தகவல்கள் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு கிடைத்தன. அதன் அடிப்படையில் கைது செய்யப்பட்ட வாலிபர்கள் 4 பேரின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் உள்ளிட்ட ஏராளமானோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
போலீஸ் காவல் முடிந்து கடந்த 4-ந் தேதி ஹரிஹரன் உள்ளிட்ட 4 பேரும் ஸ்ரீவில்லிபுத்தூர் வன்கொடுமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதேபோல் மதுரை சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டிருந்த பள்ளி மாணவர்கள் 4 பேரிடம் அங்கு வைத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் அளித்த வாக்குமூலம் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் மதுரை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த ஹரிகரன், மாடசாமி, பிரவீன், ஜூனத் அகமது மற்றும் மதுரை சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டிருந்த பள்ளி மாணவர்கள் 4 பேர் ஆகிய 8 பேருக்கும் நேற்று மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
இதற்காக அவர்கள் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு அவர்களுக்கு 5 மணி நேரம் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்பு ஹரிஹரன் உள்ளிட்ட 4 பேர் மதுரை மத்திய ஜெயிலுக்கும், பள்ளி மாணவர்கள் 4 பேர் மதுரை சிறுவர் கூர்நோக்கு இல்லத்துக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்த நிலையில் மதுரை கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டிருந்த பள்ளி மாணவர்கள் 4 பேரையும் ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று விருதுநகர் சிறார் நீதிமன்றத்தில் மாணவர்கள் தரப்பு வக்கீல் மனுதாக்கல் செய்தார். அதற்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆட்சேபனை தெரிவித்தனர்.
இருந்தபோதிலும் சிறுவர்கள் 4 பேருக்கும் ஜாமீன் வழங்கி இளைஞர் நீதிமன்ற குழும நீதிபதி மருதுபாண்டியன் உத்தரவிட்டார். இதையடுத்து சிறுவர்கள் 4 பேரும் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து இன்று விடுவிக்கப்படுகின்றனர்.