திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில், திருப்பதி – சென்னை நெடுஞ்சாலையில் உள்ள பைபாஸ் சாலையில் திருச்சானூர் அருகே பக்தர்களுக்காக ரூ.75 கோடியில் விடுதி கட்டப்பட்டது. இந்த கட்டிடத்துக்கு ஸ்ரீபத்மாவதி நிலையம் என பெயர் சூட்டப்பட்டது.
இந்த விடுதி பல மாதங்களாக பூட்டியே கிடந்தது. அதன் பின்னர் சுற்றுலா துறையினர் பராமரிப்பில் விடப்பட்டது. இதற்குள் கரோனா தொற்று வேகமாக பரவியதால் இது கரோனா தொற்று மருத்துவமனையாக மாற்றப்பட்டது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு கரோனா தொற்று குறைந்ததால், மீண்டும் இது தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இதனிடையே, ஆந்திராவில் புதிதாக 13 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. இதில் சித்தூர் மாவட்டத்தில் இருந்து பிரித்து, திருப்பதியை தலைமையகமாகக் கொண்டு, பாலாஜி மாவட்டம் உருவாக்கப்பட்டது.
இதையடுத்து பத்மாவதி நிலையத்தை புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இயங்குவதற்காக வாடகை அடிப்படையில் வழங்கியது தேவஸ்தானம். பக்தர்களின் காணிக்கை பணத்தில் கட்டப்பட்ட பத்மாவதி நிலையத்தை பக்தர்கள் தங்கும் விடுதியாக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதை ஏற்று பத்மாவதி நிலையத்தை மாற்றக் கூடாது என தனி நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்த வழக்கில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, “மாவட்ட ஆட்சியர் அலுவலகமும் பொதுமக்களின் நலனுக்காகவே செயல்படப் போகிறது என்பதால், மாவட்ட ஆட்சியர் அலுவலகமாக பத்மாவதி நிலையம் செயல்படலாம்” என தீர்ப்பு வழங்கியது.
இதை எதிர்த்து பாஜக நிர்வாகி ஜி.பி.ரெட்டி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சூர்ய காந்த் மற்றும் பேலா எம் திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு, கடந்த மார்ச் 30-ம் தேதி இந்த மனுவை தள்ளுபடி செய்தது. அத்துடன், “பத்மாவதி நிலையத்தில் ஆட்சியர் அலுவலகம் செயல்பட உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவுதான் பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளதால் இதில் தலையிட முடியாது” என நீதிபதிகள் தெரிவித்தனர்.