நாட்டில் உயர்ந்து வரும் பெட்ரோல் – டீசல் மற்றும் சிலிண்டர் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்தும் விருதுநகர் எம்ஜிஆர் சிலை அருகே விருதுநகர் மாவட்ட தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தை தேமுதிக மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கி நடத்தினார்.
ஆர்ப்பாட்டத்தின் போது அவர் பேசுகையில், “பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதுசெய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை அல்லது தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். தற்போது கலாசார சீரழிவு நடைபெற்று வருகிறது. பெண்கள் தங்களை தற்காத்துகொள்ள வேண்டும். தைரியமாக இருக்க வேண்டும். ‘நீட்’ விவகாரத்தை இழுத்துக்கொண்டு போவது அரசியல் விளையாட்டு. திமுக, நீட் தேர்வுக்கு விலக்குப் பெற்றுத்தர வேண்டும். இல்லையென்றால் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
நீட் விவகாரத்தை அரசியலாக்கி மக்களையும், மாணவர்களையும் குழப்பாதீர்கள். சொத்து வரியை 50% உயர்த்தலாம். ஆனால் 150% உயர்வை மக்கள் தாங்கமாட்டார்கள். முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை விமர்சித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு வாய்ஜாலத்தில் மட்டும் திமுக மிரட்டல் விடுத்திருக்கிறது.
‘திராணியிருந்தால் கைது செய்து பாருங்கள்’ என அண்ணாமலை சொன்னதற்கு நடவடிக்கை எதுவும் எடுக்காததிலிருந்தே அண்ணாமலை சொன்னது உண்மைதான் என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.
மக்கள் வரிப்பணத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ரெண்டு ஆடு, ரெண்டு பெட்டி, ரெண்டு மாடு வைத்திருப்பவருக்கு எதற்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு. தைரியமிருந்தால் அந்த பாதுகாப்பு வேண்டாமென மத்திய அரசுக்கு அவர் கடிதம் எழுதட்டுமே.
பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் பாகிஸ்தான், இலங்கை நாடுகளின் நிலையை பயன்படுத்தி எல்லை பிரச்னையையும், கச்சத்தீவையும் மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தனித் தமிழ்ஈழம் உருவாக வழிவகுக்க வேண்டும்” என்றார்.