சுதா கொங்கரா… தன்னுடைய திரைப்படங்கள் மூலம் எல்லா சென்டர் மக்களின் உள்ளத்தையும் கவர்ந்தவர். இவர் படங்களில் நடிக்கும் நடிகர்கள் அனைவரும் கதாபாத்திரங்களாக மட்டுமே தெரியுமளவிற்கு, அவர்களை தயார் செய்து, யதார்த்த நடிப்பை வெளிக்கொண்டு வரும் சிறந்த இயக்குநர். புத்தகங்கள் ஆக்கிரமித்த மேஜை; மணிரத்னமும் மணிரத்னம் நிமித்தமாக இருக்கும் சுவர்கள். பரபரப்பாக இருக்கும் உதவி இயக்குநர்கள் என பாசிட்டிவிட்டி நிறைந்த இடம் அது. அதே பாசிட்டிவிட்டியுடன் பயங்கர உற்சாகமாக பேசுகிறார், இயக்குநர் சுதா கொங்கரா.
‘பகல் நிலவு’ படம்தான் உங்களுக்கு சினிமா மீதான ஆர்வம் வர காரணமா இருந்ததுனு பல இடங்கள்ல சொல்லியிருக்கீங்களே!
”ஆமா. என்னை அவ்வளவு இம்ப்ரஸ் பண்ணுச்சு அந்தப் படம். முரளி செம சார்மிங்கா இருப்பார். ரேவதி மேக்கப் இல்லாமல் இருப்பாங்க. சத்யராஜ் விக் இல்லாமல் இருப்பார்னு புது அனுபவமா இருந்தது. மணிரத்னம்னா யார்னு என்னை தேட வைத்த படம் அது. ரேவதிதான் என் முதல் குரு. அவங்க இயக்கத்துல ‘Mitr, My Friend‘ படத்துல திரைக்கதை எழுதினேன். உதவி இயக்குநராகவும் வேலை செஞ்சேன். அவங்கதான் எனக்கு எப்படி க்ளாப் கொடுக்கணும்னு சொல்லிக்கொடுத்தாங்க. அவங்கக்கிட்ட நான் எப்போ பேசினாலும் ‘பகல் நிலவு’ பத்தின டாப்பிக் வந்திடும். ரேவதி டைரக்ட் பண்ணும்போது, நடிகர்கள்கிட்ட அவங்க நடிப்பை வாங்குற விதம் அவ்வளவு சூப்பரா இருக்கும். ஷோபனாவுக்கு அந்தப் படத்துக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைச்சது. 18 பெண்கள் சேர்ந்துதான் ‘Mitr, My Friend‘ படத்தை பண்ணினோம். எல்லோரும் எல்லாமே பண்ணுவோம். அந்த அனுபவத்துல நிறைய கத்துக்கிட்டோம். ஒரு இண்டிபென்டன்ட் படம் பண்ற ஃபீல்தான். இப்போவும் என்னை நான் ஒரு கமர்ஷியல் படம் எடுக்கிற இண்டிபென்டன்ட் ஃபிலிம் மேக்கராதான் பார்க்கிறேன்”.
மணிரத்னம்கிட்ட உதவி இயக்குநராக சேர்ந்த கதையைச் சொல்ல முடியுமா?
”மணிரத்னம் சார்கிட்ட உதவி இயக்குநரா சேரணும்னு என் நண்பர் சுரேஷ் பாலாஜி மூலமா முயற்சி பண்ணிக்கிட்டிருந்தேன். ‘Mitr, My Friend‘ பார்த்துட்டு வெளியே வந்து, ‘Well Done’னு சொன்னார். அவர் என்கிட்டதான் பேசினாரானு செம சந்தோஷம். அவருக்கு நம்ம வேலை பிடிச்சிருக்கு போலனு இன்னும் தீவிரமா முயற்சி பண்ண ஆரம்பிச்சேன். ‘நான் ஒரு படம் பண்ண மூணு வருஷமாகும். அதனால, நான் சொல்றேன்…’னு சொல்லிருக்கார். என் கணவருடைய சீனியர்ஸ் மூலமா ராம் கோபால் வர்மாக்கிட்ட சேரவும் முயற்சி பண்ணினேன். அவரும் ஓகே சொல்லிட்டார். ப்ரியதர்ஷன் சார்கிட்ட ‘லேசா லேசா’ படத்துல வொர்க் பண்ண கேட்டேன். ஆனா, அங்க இடமில்லை. அந்த சமயத்துல, மணி சாரை வந்து மீட் பண்ண சொன்னார்னு சொன்னாங்க. போனேன். ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ ரிலீஸாக போகுது. படம் பார்த்துட்டு, உங்க கருத்தை எனக்கு மெயில் பண்ணுங்க’னு சொல்லிட்டு போய்ட்டார். நான் அனுப்பின மெயிலை பார்த்துட்டு, என்னை கூப்பிட்டார். ‘நீதான் ஒரு படம் பண்ணியிருக்க. எழுதவும் செய்ற. இதுவே நானா இருந்தால் படம் பண்ணப்போயிடுவேன். நீ ஏன் இங்க வந்து வொர்க் பண்ணணும்னு நினைக்கிற?’னு கேட்டார். ‘எனக்கு இன்னும் என்மேல நம்பிக்கை வரலை. அதுதான் உங்கக்கிட்ட வேலை செய்யலாம் வந்திருக்கேன்’னு சொன்னேன். ‘என் படத்துல வேலை செஞ்சா உனக்கு நம்பிக்கை வந்திடுமா?’ன்னார். ‘ஒரு முறை அல்லது இரண்டு முறை நான் சினிமா ப்ராசஸை பார்த்தேன்னா, நம்பிக்கை வந்திடும். உங்களை மாதிரி மாஸ்டர்கிட்ட வொர்க் பண்ணணும்’னு சொன்னேன். எப்படியோ என்னை சேர்த்துக்கிட்டார். நான் அவர்கிட்ட சேர்ந்த கொஞ்ச நாள்கள்ல ‘பாய்ஸ்’ படத்துல வொர்க் பண்ண ஷங்கர் சார் ஒரு பெண் உதவி இயக்குநர் வேணும்னு கேட்டார். ஆனா, நீ மணி சார்கிட்ட சேர்ந்துட்டியே’னு சித்தார்த் சொன்னார். நான் எங்கே போகணும்னு நினைச்சேனோ அங்க போயிட்டேன்”
உங்களுக்கு நம்பிக்கை வந்தவுடன் தனியே படம் பண்ணுவேன்னு மணிரத்னம்கிட்ட சொல்லியிருக்கீங்க. அந்த நம்பிக்கை வர ஆறு வருஷம் தேவைப்பட்டதா?
” ‘ஆய்த எழுத்து’, ‘யுவா’ – இந்த ரெண்டு படத்துல உதவி இயக்குநரா வேலை செஞ்சிட்டேன். நான் இந்தப் படத்தோட கிளம்பி தனியா படம் பண்ணுவேன்னு நினைச்சார், மணி சார். அந்த சமயத்துல, என்னை அறியாமல் செம டிப்ரஷனுக்கு போயிட்டேன். அவ்வளவு வெறுமையா இருந்தது. சினிமாவை விட்டே போகணும்னு இருந்தது. என்ன காரணம்னே தெரியலை. ‘உனக்கு மோட்டிவேஷன் இல்லாத சமயத்துல, உன்னை ஊக்குவிக்கிற நபரோட இருக்கறதுதான் நல்லது’னு என் அப்பா சொன்னார். அதனால, மணிரத்னம் சார் கூடவே இன்னொரு படம் வேலை செஞ்சேன். அதுதான் ‘குரு’. மூணு படம், ஆறு வருடங்களாகிடுச்சு. இதற்கிடையில ஒன்பது ஸ்கிரிப்ட் எழுதினோம். அதுக்குப் பிறகு, நாம தனியா படம் பண்ணலாம்னு தோணுச்சு. மணி சார்கிட்ட நான் நிறைய கதைகள் சொல்லுவேன். அவர்கிட்ட சேர்ந்த கொஞ்ச நாள் இருக்கும். ‘அடுத்த என்ன படம் சார் பண்ணப்போறோம்?’னு கேட்டேன். ‘தெரியலை’னு சொன்னார். ‘ஒரு லவ் ஸ்டோரி பண்ணுங்க’னு சொன்னேன். ‘ஏன் நான் லவ் ஸ்டோரி பண்ணணும்?’னு கேட்டார். ‘உங்ககிட்டதான் நிறைய லவ் ஸ்டோரி இருக்குமே’னு சொன்னேன். சிரிச்சிட்டார். ‘உங்களுக்கு கதை வேணும்னா சொல்லுங்க, நான் சொல்றேன், நீங்க டைரக்ட் பண்ணுங்க’னு எல்லாம் சொல்லியிருக்கேன். இப்போ நினைச்சா காமெடியா இருக்கு. என்னை மணி சார் அதிகப்ரசங்கினுதான் கூப்பிடுவார். அவர் பேசவேமாட்டார். நான் பேசிக்கிட்டே இருப்பேன். அவர்கிட்ட அவ்வளவு கத்துக்கிட்டேன். மூணு வருஷம் நாங்க ரெண்டு பேர்தான். ஒவ்வொரு படமும் அடுத்த மூணு மாசத்துல ஆரம்பிக்கப் போறோங்கிற மாதிரி பரபரப்பா வேலை செய்வோம். மணி சார் கார் எப்போவும் 6.20க்கு ஸ்பாட்டுக்கு வந்திடும். 7 மணிக்கு ஷூட்டிங் ஆரம்பமாகிடும். அதே போல, மாலை 6.25க்கு பேக்கப். ஒரு நாள் கூட இது தவறாது. பேக்கப் சொன்ன பிறகு, அவர் எங்களை பார்த்து ஒரு ஸ்மைல் பண்ணுவார். அவருடைய அந்த சின்ன புன்னகைக்காக நாங்க அவ்வளவு உழைப்போம்”
‘ரைட்டிங்தான் என்னுடைய வீக் பாய்ன்ட்’னு சில பேட்டிகள்ல குறிப்பிட்டிருந்தீங்க. இதை ஒரு முன்னணி இயக்குநரான நீங்க வெளியே சொல்றதே பெரிய விஷயம். அந்த தைரியம் எப்படிப்பட்டது ?
”எனக்கு இது வராதுனு வெளியே சொல்றதுதான் தைரியம்னு நினைக்கிறேன். எனக்கு இது வரலைனு உணர்ந்தால்தான் அதுல கொஞ்சமாவது கவனம் செலுத்தி அதை மேம்படுத்த முடியும். எனக்கு எழுதுறது பிடிக்காது. காரணம், ரொம்ப நேரம் எடுத்துக்கும். எனக்கு பொறுமை கிடையாது. எல்லாமே சீக்கிரம் நடக்கணும்னு நினைப்பேன். ஷூட்டிங்கும் அப்படிதான். என்னுடைய பொறுமை எல்லாம் எடிட்டிங்லதான் இருக்கும். ஆரம்பத்துல எனக்கு எடிட்டிங்ல உட்கார பிடிக்கவே பிடிக்காது. ‘இறுதிச்சுற்று’ பண்ணும்போது, ராஜ்குமார் ஹிரானி கூட வேலை செய்யும்போதுதான், எடிட்டிங் கத்துக்கிட்டேன். அது எவ்வளவு சுவாரஸ்யமான வேலைனு புரிஞ்சுக்கிட்டேன். எடிட்டிங்கை அவர் அவ்வளவு லவ் பண்ணுவார்”
உங்க பூர்வீகம் ஆந்திரா. வளர்ந்ததெல்லாம் தமிழ்நாடு. நேரடி தெலுங்குப் படம் பண்ணணும்னு நினைச்சிருக்கீங்களா?
”நிறைய ப்ராசஸ் நடந்தது. ஆனா, எதுவும் டேக் ஆகலை. எனக்கும் தமிழ்ல அடுத்தடுத்து கமிட்மென்ட்ஸ் இருந்தது. மணி சார்கிட்ட இருந்தப்போ, நாகர்ஜுனாவுக்கு ஒரு கதை சொன்னேன். அந்தக் கதை மணி சாருக்கும் தெரியும். இந்தக் கதையை எப்படி அவர் ஒத்துக்குவார்னு மணி சார் கேட்டார். இருந்தாலும் நான் முயற்சி பண்ணி பார்க்குறேன்னு அவர்கிட்ட கதை சொன்னேன். மணி சார் என்ன சொன்னாரோ அதையேதான் நாகர்ஜுனா சாரும் சொல்லி பண்ணலைனு சொல்லிட்டார். தமிழ் எனக்கு எவ்வளவு தெரியுமோ அவ்வளவுதான் தெலுங்கும் தெரியும். ரெண்டும் முறையா கத்துக்கலை. ஸ்கூல்ல இந்திதான். சினிமா போஸ்டர்கள் பார்த்துதான் தமிழ் எழுத்துக்கூட்டி படிக்க ஆரம்பிச்சேன். மணிரத்னம் சார்கிட்ட சேரும்போது, ‘தமிழ் எழுத தெரியுமா?’னு கேட்டார். தெரியும்னு சொல்லி கத்துக்கிட்டேன். ‘பொன்னியின் செல்வன்’ படிக்க சொன்னார்னு படிச்சேன். அப்படிதான் எனக்கு தமிழ் பழக்கமாச்சு. லீவ்னா அம்மாகூட ஊருக்கு போய் கிராமத்துல இருக்கிற நூலகத்துல இருக்கிற தெலுங்கு புத்தகங்கள் படிச்சு படிச்சு தெலுங்கு கத்துக்கிட்டேன். வெங்கடேஷுக்கு தெலுங்கு படிக்கத் தெரியாது. என்கிட்ட தெலுங்கு டயலாக் இருக்கும். அவருக்கு தங்கிலீஷ் மாதிரி தெங்லீஷ்ல டயலாக் இருக்கும். அதே மாதிரி, மாதவனுக்கு தமிழ் படிக்க தெரியாது. அதனால அவருக்கு தங்கிலீஷ்ல டயலாக் இருக்கும். என்கிட்ட தமிழ்ல இருக்கும். எனக்கு அந்தந்த மொழியில படிச்சாதான், அந்த உணர்வு கிடைக்கும். நேரடி தெலுங்கு பண்ற மாதிரி இருந்ததுனா, நிச்சயமா சொல்றேன்”
நீங்க உங்க பொண்ணுங்களுக்கு எப்படிப்பட்ட அம்மா ?
”கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்டான அம்மாதான். அவங்க ஸ்கூல்ல இருந்தே ஹாஸ்டல் லைஃப்தான், பாவம். நான் அவங்க பிறந்த பிறகுதான், உதவி இயக்குநராகவே சேர்ந்தேன். அவங்களுடைய சின்ன வயசுல அவங்கக்கூட அதிக நேரம் செலவழிச்சதில்லை. நீங்க பெஸ்டாக இருக்கணும்னு இல்லை. எல்லா பக்கமும் உங்க பெஸ்டை கொடுங்கன்னு அவங்கக்கிட்ட சொல்வேன். மூத்த பொண்ணு சார்டட் அக்கவுன்டட். ரெண்டாவது பொண்ணு எகனாமிஸ்ட். ரெண்டு பேருமே சினிமாவுலதான் இருக்காங்க. இப்போ படங்கள் தயாரிக்கலாம்னு இருக்கேன். அவை எல்லாம் பெண்களை முதன்மையா வெச்சு இருக்கிற கதைகளாதான் இருக்கும். அதை எல்லாம் இவங்கதான் பாத்துக்கப்போறாங்க. என் படங்களுடைய க்ரெடிட் என் பொண்ணுங்கதான்”
‘ஜெய் பீம்’ பார்த்துட்டு சூர்யாக்கிட்ட என்ன சொன்னீங்க ?
” `சூரரைப் போற்று’ படத்தைவிட நல்ல கன்டென்ட். இந்த மாதிரி படங்கள் பண்றது ரொம்பப் பெருமையா இருக்கு, வாழ்த்துகள்னு சொன்னேன். இதை அவர் பண்ணலைனா, இவ்வளவு தூரம் ரீச்சாகி இருந்திருக்காது. லிஜோ மோள்தான் அதுல முதன்மை கதாபாத்திரம். அதைக் கண்டுக்காமல் அவருடைய கேரக்டர் பண்ணினார். ரித்திகா கேரக்டர்தான் படம், அப்புறம்தான் நம்ம கேரக்டர்னு மாதவனுக்கு தெரியும். இருந்தும் அதை ஏத்துக்கிட்டு படத்துக்கு சப்போர்ட் பண்ணி அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துட்டு போறதுக்கு அவங்களுக்கு ஹேட்ஸ் ஆஃப் !”
‘இறுதிச்சுற்று’, ‘சூரரைப் போற்று’ ரெண்டுமே கீழே இருந்த ஒரு சாமானியன் எப்படி ஜெயிக்கிறான் அப்படிங்கறதுதான் அடிப்படை. அடுத்து நீங்க பண்ணப்போற வெப் சீரிஸும் அப்படிதான். இது மாதிரியான கதைகளை இயக்கத்தான் உங்க விருப்பமா ?
இப்போ நிறைய இயக்குநர்கள் பெண் உதவி இயக்குநர்கள் தேவைனு கேட்கிறாங்க. இதுக்கு என்ன காரணம் ?
இப்போ எந்தப் பக்கம் திரும்பினாலும் ‘பேன் இந்தியா’ங்கிற வார்த்தைதான் கேட்குது. இந்த வார்த்தையை எப்படி பார்க்கிறீங்க ?
வட இந்தியாவுல நிறைய பேர் ‘சூரரைப் போற்று’ பார்த்திருக்காங்கனு சொல்றீங்க. இப்போ நீங்க அதை இந்தியில ரீமேக் பண்ணப்போறீங்க. எப்படி வொர்க் அவுட்டாகும்னு நினைக்கிறீங்க ?
மறுபடியும் நீங்க சூர்யாவை இயக்கப்போறீங்கனு ஒரு தகவல் இருக்கே ! உண்மையா? போன்ற கேள்விகளுக்கான பதில் இந்த வார ஆனந்த விகடன் இதழில் இடம்பெற்றுள்ளது. அதைக் கீழே உள்ள லிங்க் -கில் சென்று படிக்கவும்.