7 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் – பெற்றோர்கள் ஷாக்!

கர்நாடக மாநிலத்தில், 7 தனியார் பள்ளிகளுக்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலத்தில், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தின் தலைநகர் பெங்களூரில் உள்ள, 7 தனியார் பள்ளிகளுக்கு இன்று காலை 11:09 மணி அளவில், மின்னஞ்சல் மூலம் வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்து வந்து சம்பவ இடங்களுக்கு விரைந்த போலீசார், பள்ளிகளில் இருந்த மாணவர்களை பத்திரமாக மீட்டு வெடி குண்டு நிபுணர்கள் மூலம் சோதனை நடத்தினர். மொத்தம் 7 தனியார் பள்ளிகளுக்கு விடுக்கப்பட்ட வெடி குண்டு மிரட்டலில், 2 பள்ளிகளில் முழுவதுமாக சோதனை நடைபெற்றது. அங்கு எந்தவித வெடி குண்டும் கண்டுபிடிக்கப்படவில்லை. மீதம் உள்ள 5 பள்ளிகளில் வெடி குண்டு நிபுணர்கள் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து
பெங்களூரு
கிழக்கு கூடுதல் காவல் ஆணையர் சுப்ரமணியேஸ்வர ராவ் கூறுகையில், “மின்னஞ்சல் பெரும்பாலும் ஒரு புரளி. ஆனால் நாங்கள் அதை தீவிரமாக எடுத்துக் கொள்கிறோம்” என தெரிவித்தார். வெடி குண்டு மிரட்டல் சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த பெற்றோர்கள், தங்களது பிள்ளைகளை பத்திரமாக அழைத்துச் சென்றனர்.

ஒருசில பள்ளிகளில் தேர்வுகள் நடைபெற்றன. எனினும் வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், தேர்வுகளில் எந்தவித தொய்வும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது. பெங்களூரில் ஒரே நேரத்தில் 7 பள்ளிகளுக்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.