அபிராமியின் நள்ளிரவு எலிமினேஷனைத் தொடர்ந்து ஜூலியும் எலிமினேட் ஆகியிருப்பதாகத் ஒரு தகவல் வந்திருக்கிறது. கடைசி வாரமாக இருந்தாலும்கூட மூச்சுத்திணறும் டாஸ்க்குகளை சரமாரியாக தந்து கொண்டிருக்கிறார் பிக் பாஸ். ரம்யாவிற்கு காலில் அடிபட்டது ஒருவகையில் அவருக்கு நல்லதாகப் போயிற்றுபோல. தனக்குப் பதிலாக வேறு யாரையாவது ஆட வைத்து காலை மெத்தையில் ஜாலியாக வைத்துக் கொண்டிருக்கிறார்.
எபிசோட் 68-ல் நடந்தது என்ன?
அபிராமியின் எலிமினேஷனை நேற்றைய மெயின் எபிசோடில் காட்டவில்லை. குணா கமல் மாதிரி நாம்தான் ‘அபிராமி. அபிராமி’.. என்று பாயைப் பிறாண்ட வேண்டும் போல. மெயின் எபிசோடை மட்டுமே தினசரி பார்க்க இயல்கிற பார்வையாளர்கள் கணிசமாக இருக்கலாம். அவர்களுக்கும் கதை வசனம் புரிகிற மாதிரி எடிட் செய்வதுதான் பிக் பாஸ் டீமிற்கு நல்லது. குறைந்தபட்சம் பிரமோக்களையாவது பார்த்தால்தான் ஒரு குன்சாக நாம் புரிந்துகொள்ள முடியும்.
“பாலா ஆடுவது எமோஷனல் கேமா?”
தற்செயலாக வருகிற கேள்விகளுக்கு போட்டியாளர்கள் பதில் சொல்லும் டாஸ்க் பாதியிலிருந்து காட்டப்பட்டது. ‘பாசத்தை பகடைக்காயாக பயன்படுத்துபவர் யார்?’ என்கிற கேள்விக்கு துளியும் சந்தேகமின்றி ‘பாலா’வை நோக்கி கைகாட்டினார் ரம்யா. ‘தாமரை, அபிராமி ஆகியோரை வைத்துக்கொண்டு Emotional gameplay-வை பாலா ஆடுகிறார்’ என்பது ரம்யாவின் கணிப்பு. பாலாவால் இதற்கு ரியாக்ட் செய்யாமல் இருக்க முடியவில்லை. “ரம்யா.. ஒரு கேள்வி கேட்கட்டுமா? நான் நல்லவனா தெரிஞ்சா உங்களுக்கு என்ன பிரச்னை?” என்று மடக்கும் விதத்தில் கேட்டார். பாலா அதைக் கேட்டிருக்கவே வேண்டாம்.
இதர சமயங்களில் தீராத புன்னகையுடனும் மொக்கை ஜோக்குடனும் காணப்படும் ரம்யா, வாக்குவாதம் என்றால் மட்டும் டெரர் மோடிற்கு மாறி விடுகிறார். அதிலும் பாலா, தாமரையுடனான வாதம் என்றால் சந்திரமுகியாகவே மாறி விடுகிறார். பாலாவின் கேள்விக்கு ரம்யா பதில் அளித்த விதம் சிறப்பு. “நல்லவனா இருக்கறது பிரச்னையில்ல. நல்லவன் மாதிரி காண்பிச்சுக்கறதுதான் பிரச்னை. மக்கள்கிட்ட பேசும்போது வேற மாதிரி சொல்றீங்க. அதுவே வீட்டுக்குள்ள பேசும்போது வேற சொல்றீங்க.. இந்தப் புகாரை நான் தொடர்ந்து சொல்லிட்டுத்தான் இருக்கேன். உங்க கிட்ட நேராத்தான் சொல்றேன்” என்று ரம்யா சொன்ன விளக்கத்திற்கு “அப்ப. நான் நல்லவன் இல்லையா?” என்று பரிதாபமாக மட்டுமே பாலாவால் கேட்க முடிந்தது.
“இவரைத் தவிர வேற யாராவதுக்குத்தான் டிராஃபி கிடைக்கணும்னா. யாரைச் சொல்வீங்க?” என்கிற வில்லங்கமான கேள்வி பாலாவிற்கு வந்தது. “எல்லோருக்கும் சமமா ஓட்டு போட்டீங்க. பார்த்தீங்களா. உங்களுக்கு இப்படி ஒரு கேள்வி?!” என்று சொல்லிச் சிரித்தார் ரம்யா. (பாலா ஆடியது சேஃப் கேம் என்பதை அப்போதே எழுதியிருந்தேன்). இந்தச் சமயத்தில் ரம்யாவிற்கு ஆதரவாக நிரூப் எதையோ சொல்லப் போக “இப்ப நீ ரம்யாவோட சொம்பா மாறிட்டியா?” என்று எரிச்சலானார் பாலா. அதாவது இவர் தாமரையின் மீது வைத்திருப்பது பாசமாம். அதுவே மற்றவர்கள் என்றால் சொம்பாம். தக்காளி சட்னி vs ரத்தம் என்கிற தத்துவம். “ஆமாம்டா. எனக்கு ரம்யாவைப் பிடிக்கும்டா” என்று பட்டவர்த்தனமாக தெரிவித்தார் நிரூப்.
“ரம்யாவிற்கு டிராஃபி கிடைக்க தகுதி கிடையாது” – பாலா அதிரடி
தனக்கு வந்த கேள்விக்கு பாலா என்ன பதில் சொல்வார் என்பது எளிதில் எதிர்பார்க்கக்கூடியதே. அது ரம்யாதான். “ஷோவை பார்த்துட்டு தெளிவா வந்திருக்காங்க. இங்க யார் கிட்டயும் பழகாம, பேசாம இருக்க முடியாது. அதைப் போய் எமோஷனல் ப்ளே-ன்னு சொல்றாங்க… ரம்யாவோட ஒரிஜினல் முகம் இது இல்ல. மறைக்கறாங்க… வைல்ட் கார்ட்ல வந்தவங்களைவிட ஆரம்பத்துல இருந்து விளையாடறவங்களுக்குத்தான் தகுதி அதிகம்” என்ற பாலா சொன்ன விளக்கத்தில் கடைசி பாயிண்ட் மட்டும் சுமாரான சமாளிப்பாக இருந்தது.
நாள் 67 விடிந்தது. ‘மாட்டிக்கிச்சே. மாட்டிக்கிச்சே’ என்கிற பாடலைப் போட்டார் பிக் பாஸ். “நீ ரம்யாவுக்கு சப்போர்ட் செஞ்சே. அப்ப என்னமோ இருக்கு… அதான் பிக் பாஸ்கூட இந்தப் பாட்டை போட்டிருக்காரு” என்று நிரூப்பை தொடர்ந்து கிண்டல் செய்து கொண்டிருந்தார் அனிதா. வீல் சேருடன் ரம்யா வெளியில் வந்து நடனத்தில் பங்கு பெற முயன்றது சிறப்பு.
‘போஸ்ட் வந்திருக்கு.. போஸ்ட் வந்திருக்கு’ என்கிற குரல் தபால் பெட்டியின் அருகில் ஒலித்தது. இதுபோன்ற குரல்களை கடைசியாக தூர்தர்ஷன் டிராமாக்களில் மட்டுமே கேட்டிருக்கிறேன். காலை டாஸ்க். தமிழ் திரைப்படத்தின் டைட்டில்களை சக போட்டியாளர்களுக்கு டெடிகேட் செய்ய வேண்டுமாம். பாலாவை ‘நண்பன்’ என்று சொல்லி மகிழ்ந்தார் ஜூலி. அனிதாவை, சிட்டிஸன் படத்தில் வரும் ‘நக்மா கேரக்ட்டர்’ என்று பாலா சொன்னது சிறப்பான உதாரணம். (செம. செம.!). பாலாவைச் சொல்லும் போதெல்லாம் இலவச இணைப்பாக நிரூப்பையும் சேர்த்துக் கொள்வது தாமரையின் வழக்கம். மன்னன் படத்தின் ரஜினிதான் பாலாவாம். அம்பூட்டு தாய் பாசம். ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தில் வரும் அக்கா – தம்பி உறவுதான் நிரூப்பாம்.
“சில சமயங்களில் பாலா ‘சந்திரமுகி’யாக மாறிடுவான்” என்று கிண்டலடித்தார் நிரூப். உண்மைதான். குறிப்பாக டாஸ்க் சமயங்களில் பாலாவின் ஆக்ரோஷம் மிகுந்து விடும். ஜூலிக்கு ‘எதிர்நீச்சல்’ என்று டைட்டில் தந்து ஊக்கப்படுத்தினார் அபிநய். பாகுபலி படத்தின் பிரதான பாத்திரங்களை பாலா, நிரூப், தாமரை ஆகியோர்களுக்கு பொருத்தி மகிழ்ந்த ரம்யா “இதுல யாரு பிரபாஸ். யாரு ராணா.. ன்னு கேட்காதீங்க..” என்று எஸ்கேப் ஆனார். (அப்ப தேவசேனா ரம்யாவா?!). “நாங்க ரெண்டு பேரும் சமமான பலமுள்ள எதிரிங்க” என்று விக்ரம் வேதா திரைப்படத்தை பாலாவிற்கும் தனக்கும் பொருத்தி சந்தோஷப்பட்டார் அனிதா. பாலாவையும் நிரூப்பையும் RRR படத்தின் பாத்திரங்களோடு இணைத்து மகிழ்ந்தார் ஷாரிக் (“அவன் படம் பார்த்துட்டு வந்துருக்கான்” – நிரூப்).
தரையில் மீனாக மாறித் துடித்த போட்டியாளர்கள்
“தள்ளு.. தள்ளு..” என்கிற அடுத்த டாஸ்க்கை கொடூரமாக ஆரம்பித்தார் பிக் பாஸ். கையையும் கால்களையும் கட்டி தரையில் போட்டு விடுவார்கள். உடலை அசைத்து அசைத்து முன்னேறுவதன் மூலம் ஒரு பந்தை உருட்டிச் சென்று சேர்க்க வேண்டும். நீரில் ஓடுகிற மீனை எடுத்து தரையில் போட்டது போல போட்டியாளர்கள் உடலை உதறி உதறி தரையில் தேய்த்துக் கொண்டு சென்றார்கள். பாலா, ஜூலி ஆகிய இருவரும் கைகளை நைசாக பயன்படுத்தியபோது பிக் பாஸ் கண்டுபிடித்து எச்சரித்தார். ஒரு கட்டத்தில் காயம் காரணமாக பாலா விலக, நிரூப் ஆவேசமாக அங்கப்பிரதட்சணம் செய்ததில் அவரது விரல்களில் ரத்த சிராய்ப்புகள் வர, அனிதா பதறிப் போய் தடுத்து நிறுத்தினார். தாமரைக்கும் ஜூலிக்கும் நடந்த டாஸ்க்கில் தாமரையின் ஆவேசம் வழக்கம் போல் உக்கிரமாக இருந்தது. இந்த டாஸ்க்கில் நிரூப்பும் தாமரையும் வெற்றி பெற்றார்கள். (பிக் பாஸ் இப்பல்லாம் எந்தப் பரிசும் கொடுப்பது இல்லை. “பேட்டா –லாம் எங்கம்மா தர்றாங்க.. பொங்கலும் புளியோதரையும் கொடுத்து கணக்கை கழிச்சுடறாங்க’ என்கிற ரேஞ்சில்தான் போய்க் கொண்டிருக்கிறது!).
`ஜித்து ஜில்லாடி’ என்கிற பாடல் மெயின் கேட் அருகே கேட்ட போது புதிய கெஸ்ட் வருகிறார் என்பதை உணர முடிந்ததது. ஆனால் வந்தது பழைய சீசனின் போட்டியாளர். தாடியும் கூலிங்கிளாஸூமாக புதிய லுக்கில் நுழைந்த ரியோவை அடையாளம் காணவே சில நிமிடங்கள் தேவைப்பட்டன. “வெளியே ஒரு கேஸை பண்ணிட்டு உள்ளே வந்து ஜாலியா இருக்கீங்களா?” என்று தாடி பாலாஜியை கிண்டல் செய்தார் ரியோ. அனைவரையும் விசாரித்து விட்டு ‘Restricted Area’ அருகே ஆசையாக சென்ற ரியோவை ‘போகாதே.. போகாதே..’ என்று பாட்டுப்பாடி தடுத்தார்கள். (பிக் பாஸ் தந்த டோஸ் அப்படி!).
அனிதாவும் நிரூப்பும் அமர்ந்து தனியாக பேசிக் கொண்டிருந்தார்கள். தனது சிந்தனா முறையின் வரைபடத்தைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார் அனிதா. “ஒண்ணு முதல் நூறு வரை எண்ணச் சொன்னா. மத்தவங்க ‘ஒண்ணு டூ நூறு’ன்னு முடிச்சுடுவாங்க. ஆனா ஒண்ணுல இருந்து நூறு வரைக்கும் நான் சொல்லுவேன்” என்றார் அனிதா. அதாவது ஒரு விஷயத்தை பல ஆங்கிளில் டிசைன் டிசைனாக யோசிப்பாராம். `நான் ஓவர் திங்க்கிங்’ன்னு சொல்லி சொல்லியே ஸ்டாம்ப் பண்ணிட்டாங்க. அப்படின்னா வெளியவும் அப்படித்தான் நெனப்பாங்க” என்று அனிதா சொன்னது ஒருவகையில் உண்மைதான். ஆனால் அனிதா அப்படிச் செய்வதே இல்லையா என்பதை அவரே வீடியோவில் பார்த்தால் தெரியும். வீட்டிற்குள் இருந்தபோது “என் இமேஜ் எப்படி வெளியே தெரியுதோ?!” என்று டிசைன் டிசைனாக புலம்பியவர் இதே அனிதாதான். ஆனால் வெளியில் சென்று விட்டு வந்த பிறகு “அப்படியொண்ணும் பிரச்னை இல்லை” என்று மகிழ்ந்தவரும் இதே அனிதாதான். எனில் உள்ளே அவர் யோசித்து யோசித்து புலம்பியது வீண்தானே?! இந்த எளிய லாஜிக் கூடவா அனிதாவிற்குப் புரியவில்லை?!
சுருதியிடம் அனத்திய தாமரை – “நான் பண்றது நடிப்பா கோப்பால்?”
‘ஒரு புன்னகை பூவே’ என்று அடுத்த பாடல் மெயின் கேட் அருகே ஒலித்தது. மக்கள் பாய்ந்து ஓடினார்கள். மெருகேற்றப்பட்ட லுக்கில் வந்து இறங்கினார் சுருதி. கையில் மல்லிகைப்பூவும் சாக்லேட்டும். தாமரையின் மகன் மல்லிகைப்பூவுடன் வந்திறங்கிய காட்சி நினைவிற்கு வந்தது. “பொட்டி எங்கே?” என்று குறும்பாகக் கேட்டார் நிரூப். வீல் சேரில் அமர்ந்திருந்த ரம்யாவைப் பார்த்து “உங்க பேன்ஸ்லாம் வெளியில அழறாங்க” என்று கலாட்டா செய்தார் சுருதி. (அவ்வளவு சத்தமாவா கேக்குது?!)
சுருதி வந்ததில் தாமரைக்கு ஒரே குஷி. முத்த மழை பொழிந்தார். “நீ பெட்டியை எடுத்துட்டுப் போனதுல இருந்து அபியும் ஜூலியும் மூஞ்சை தூக்கி வெச்சுட்டு இருந்தாங்க. நான் விசாரிக்கலையாம். அதனால நடிப்புன்னு சொல்றாங்க. எப்படி சாமி இவங்களுக்கு மனசு வருது?!” என்றெல்லாம் புலம்பிய தாமரையிடம் “இந்த கேம் இப்படித்தானே இருக்கும்?” என்று ஆறுதல் சொன்னார் சுருதி.
கிராமத்தில் நிகழும் உறியடி மாதிரி அடுத்த டாஸ்க்கை இறக்கினார் பிக் பாஸ். டிரம்மில் உள்ள சாயத்தண்ணீரை மொண்டு சில தடைகளைத் தாண்டி வந்து அவரவர்களின் தொட்டிகளில் ஊற்ற வேண்டும். இவர்களுக்கு இடையூறு செய்யும் விதமாக மற்றவர்கள் பந்துகளை கொண்டு எறிவார்கள். மூன்று முறைக்கு மேல் காலை கீழே வைத்தால் அவுட்’ என்கிற விதி இருந்தாலும் “நான் ரெண்டு தடவைதான் வெச்சேன்” என்று பலர் போங்காட்டம் ஆடினார்கள். நிரூப்பின்மீது ஒரு பந்து ஆவேசமாக வந்த போது “நல்ல வேளை புத்திரபாக்கியம் போயிருக்கும்” என்று பாக்கியராஜ் பட பாணியில் நகைச்சுவை கமென்ட் அடித்தார் நடுவர் ரியோ. இந்த டாஸ்க்கில் நிரூப் வெற்றி பெற்றார்.
கொலைவெறியுடன் கலாட்டா செய்வது என்றால் நிரூப்பிற்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. எனவே மீதமிருந்த ஏராளமான சாயத் தண்ணீரை எடுத்து அனிதா, சுருதி ஆகியோர்களின் மீது ஊற்றி ரகளை செய்தார். பாலாவும் ஷாரிக்கும்கூட வந்து சேர்ந்தார்கள். பள்ளிக்கு செல்ல அடம்பிடிக்கும் மகளை, தரதரவென்று இழுத்துச் செல்லும் தந்தை மாதிரி அனிதாவை நிரூப் இழுத்துச் சென்ற காட்சி நகைச்சுவையாக இருந்தது. கார்டன் ஏரியா முழுக்க ரணகளமாக இந்த ஹோலி திருவிழா நடந்தது. இதில் தப்பிப் பிழைத்தவர் ரம்யா, ரியோ மற்றும் அபிநய் மட்டுமே.
கேள்வி – பதில் விளையாட்டு
அடுத்ததாக ‘கேள்வி நேரம்’ என்கிற விளையாட்டை ஆரம்பித்தார் பிக் பாஸ். அனைவரும் வட்டமாக அமர்ந்து பாட்டிலைச் சுழற்றி விட்டு அதன் முனை எவரை நோக்கி நிற்கிறதோ, அவரிடம் கேள்வி கேட்கப்பட வேண்டும். “வைல்ட் கார்ட்டுல வந்துட்டு ஃபைனலுக்கு தகுதியிருக்குன்னு நெனக்கறீங்களா? என்கிற கேள்வியை ரம்யாவிடம் எறிந்தார் ரியோ. “வைல்ட் கார்டுல வந்தவங்க ஜெயிக்கக்கூடாதுன்னு எந்த ரூலும் இல்லை. ஆட்டம் மாறிட்டே இருக்கு. கடைசியிலும் மாறும். இறுதிக்கு நான் தகுதியானவதான்” என்று தன்னம்பிக்கையுடன் பேசினார் ரம்யா.
“உன் ஸ்ட்ராட்டஜி என்ன?” என்று பொத்தாம் பொதுவான கேள்வியை பாலாவிடம் கேட்டார் நிரூப். “போன சீசன்ல எப்படி இருந்தேனோ அப்படியேதான் இப்பவும் இருக்கிறேன். அதனாலதான கடந்த முறை மக்களுக்குப் பிடிச்சு ரன்னர் அப்- ஆ வந்தேன். இந்த முறை சில தவறுகளைத் திருத்திக்கிட்டேன்.” என்று விளக்கம் தந்தார் பாலா. ஆனால் முன்கோபம், தூக்கி எறிந்து பேசுதல், டாஸ்க்கில் காட்டும் அநாவசிய ஆவேசம், இறுக்கமாக இருத்தல் போன்றவற்றைத் தவிர்த்தால் பாலாவின் கிராஃப் இன்னமும் உயரும். “பிக் பாஸ் போட்டியாளர்களை ஆபாசமாகத் திட்டும் சிலரைப் பற்றி என்ன நெனக்கறீங்க?” என்று ஜூலியிடம் கேட்டார் அனிதா. “அவங்களை எதுவும் சொல்ல மாட்டேன்” என்று ஜூலி ஆரம்பித்த போது சேஃப் கேம் ஆடுகிறாரோ என்று தோன்றியது. ஆனால் “நல்ல குடும்பத்துல பொறந்தவங்க அப்படிச் செய்ய மாட்டாங்க” என்று ஜூலி இறங்கி அடித்தவுடன்தான் மகிழ்ச்சியாக இருந்தது.
“நிரூப் கிட்ட நிறைய நல்ல விஷயங்கள் இருக்கும். எதையும் ஸ்போர்ட்டிவ்வா எடுத்துக்கறான்.. ஜாலியா இருக்கான். மத்தவங்களையும் ஜாலியா வெச்சுக்கறான். அதெல்லாம் ஓகே. ஆனா ஜெயிக்கணும்ன்ற வெறி மிஸ் ஆகுதே.. பார்வையாளர் ஒருத்தர் கூட இதைக் கேட்டாரே” என்கிற கேள்வியை முன்வைத்தார் ரம்யா. “வெறி உள்ள இருக்குது. ஆனா அதை ரிஜிஸ்டர் பண்ணிட்டே இருக்கணும்னு அவசியமில்ல” என்றார் நிரூப்.