கிரிக்கெட் விளையாட்டில் மேன் ஆஃப் தி மேட்ச் விருது முதல் முறையாக வழங்கப்பட்ட ஆண்டு 1975. 22 வீரர்கள் விளையாடும் போட்டியில் சிறப்பாக விளையாடும் ஒருவருக்கு மட்டும் விருது கொடுக்கப்பட்டும் வழக்கம் போய், எல்லோருக்கும் அவார்ட் கொடுக்கும் காலகட்டத்திற்கு வந்திருக்கிறோம். ஐ.பி.எல் போட்டி ஒவ்வொன்றிற்கும் இப்போது எட்டு விருதுகள் வரை கொடுக்கப்படுகிறது. அதில் பல விருதுகள் எதற்கென்றே தெரியாதவை. குறிப்பாக அப்போட்டியில் அதிவேகமாக டெலிவரியை வீசியவருக்குக் விருது கொடுக்கிறார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிய போட்டியில் கிறிஸ் ஜோர்டன் 139 kmph வேகம்தான் அன்றைக்கு அதிகபட்சமாகவே இருந்தது. ஆனால் அதற்கு ஒரு விருது! இது எவ்வளவு தவறான ஒரு முன்னுதாரணமாக இருக்கப்போகிறது!
ஒரு காலத்தில் வேகப்பந்துவீச்சு என்றாலே மேற்கிந்திய பௌலர்கள்தான் நினைவுக்கு வருவார்கள். பின்னர் காலம் போக போக ஷோயப் அக்தர், ஷேன் பாண்ட், பிரெட் லீ, ஷான் டைட், ஜான்சன் போன்ற வீரர்கள் உலக அரங்கில் வேகப்பந்துவீச்சாளர்களாக மிரட்டினார்கள். ஆனால் அவர்களின் வெற்றிக்கான காரணம் வேகத்தில் மட்டுமல்ல. வேகத்துடன் சேர்த்து பல விதமான ஸ்விங், ‘சீமிங்’ பொசிஷன் என பல நுட்பமான விஷயங்கள் அதில் கலந்து இருந்தது. அதை வெறுமென வேகம் என்ற ஒரு சொல்லுக்குள் சுருக்கிவிட முடியாது. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெடுகளுக்குச் சொந்தகாரரான ஜேம்ஸ் ஆன்டர்சனின் சராசரி வேகம் வெறும் 130-135 kmph தான். ஏன் நம்மூரில் 145+kmph வீசும் வருண் ஆரோன் போன்ற வீரர்கள் இந்திய அணியில் காணாமல் போன கதையும் உண்டு. அதே வேகத்தில் வீசிய ஜாஹிர் கான் போன்ற வீரர்கள் மாபெரும் ஜாம்பவான்களான கதையும் உண்டு. இந்த கதைகள் கூறும் வேகப்பந்துவீச்சில் வேகம் என்பது ஒரு பகுதியே தவிர ஒரே பகுதி அல்ல!
ஐ.பி.எல் போன்ற தொடர்களில் ஆட்டத்தின் இறுதியில் பல விருதுகள் கொடுப்பதற்கான காரணம் வணிக ரீதியாக கிடைக்கும் ஸ்பான்சர்கள்தான். இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் அதிவேகமாக பந்து வீசிய பந்துவீச்சாளருக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படுகிறது. நீளம் தாண்டுதலில் நீளமாக தாண்டியவரை விட்டுவிட்டு உயரமாக தாண்டியவருக்கு விருது கொடுப்பதுபோல் உள்ளது இவ்விருது. உதாரணத்துக்கு ஒரே அணியில் விளையாடும் உம்ரன் மாலிக்கையும் நடராஜனையும் எடுத்துக்கொள்வோம். இருவரும் அவர்களின் அணிக்கு மிக முக்கிய வீரர்கள். இதுவரையிலான இரண்டு போட்டிகளில் மாலிக் எடுத்துள்ள விக்கெட்டுகள் 2 ( Eco 11.14), நடராஜன் எடுத்துள்ள விக்கெட்டுகள் 4 (Eco 8.62). மாலிக்கிற்கு கிடைத்துள்ள பரிசுத்தொகை 2 லட்சம். ஆனால் அவரைவிட அணிக்கு சிறப்பான பங்களிப்பை அளித்துள்ள நடராஜனுக்கு ஒரு ரூபாய் கூட இல்லை. இது எந்த வகையில் நியாயம் !
மாலிக் இளம் வயதிலேயே உலகின் கண்களை தன் மீது திருப்பியுள்ளவர். வெறும் 22 வயதில் ஐ.பி.எல் அணி ஒன்றால் வில்லியம்சன் போன்ற தலைசிறந்த வீரர்களுடன் சேர்த்து ரிட்டைன் செய்யப்படுவதெல்லம் மாபெரும் சாதனை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அவரை எதற்காக கொண்டாடுகிறோம் என்பதும் முக்கியம். அவரின் வேகத்தைப் பயன்படுத்தி எதிரணிகள் ஸ்கோர் செய்துகொண்டிருக்கும்போது, இந்த விருதுகள் அடுத்த தலைமுறைக்கு எதைக் கொண்டு போய் சேர்க்கும். ‘வேகம் தான் முக்கியம்’ என்பதைத்தானே உணர்த்தும்!
அதே போல் பெங்களூரு கொல்கத்தா அணிகளுக்கான இடையிலான போட்டியில் நான்கு ஓவரில் வீசி 11 ரன்கள் (Eco 2.75) மட்டுமே கொடுத்திருந்தார் சிராஜ். ஹாசரங்காவும் 20 ரன்கள் (Eco 5.0) மட்டுமே கொடுத்து சிறப்பாக பந்து வீசியிருந்தார். அதே போட்டியில், ஆகாஷ் தீப் 3.5 ஓவரில் 45 ரன்களை (Eco 11.73) வாரி வழங்கி இருந்தார். ஆனால் வேகமான பந்தை வீசினார் என்ற காரணத்திற்காக மட்டும் அதற்கான விருதை பெற்றார் ஆகாஷ் தீப். அதேபோல், நேற்று நடந்த லக்னோ vs டெல்லி போட்டியிலும் அதிவேக பந்தை வீசியதற்காக ஆன்ரிச் நார்கியா பரிசு பெற்றார். ஆனால், டெல்லி தோற்பதற்கு மிகமுக்கியக் காரணமாக இருந்தவர் அவரே. 2.2 ஓவர்கள் மட்டுமே வீசி 35 ரன்கள் விட்டுக்கொடுத்து இரண்டு பீமர்கள் வீசியதற்காக பந்துவீச்சிலிருந்து விலக்கவும் பட்டார் அவர். அதன்பிறகு அவரின் ஓவரை தொடர்ந்தவர் குல்தீப். அனைத்து பௌலர்களும் சிக்கனமாக வீச, இவர் 15 எகானமி வைத்திருந்தார். ஆனால், போட்டிக்குப் பிறகு நார்க்கியாவே கௌரவிக்கப்பட்டார்!
வேகமாக பந்து வீசுவது பாராட்டக் கூடிய விஷயம்தான். ஆனால் அதை மட்டும் வைத்து ஒவ்வொரு போட்டியிலும் விருது கொடுப்பது ஒரு சரியான விஷயமா என்று கேட்டால்,நிச்சயம் இல்லை. கிரிக்கெட்டில் பல விதமான டெக்னாலஜிகள் புதிதாக வந்து கொண்டேதான் இருக்கிறது. ஒரு வீரரின் பலம், பலவீனம் என எல்லாவற்றையும் குட்டி திரையில் கொண்டு வந்துவிடுகிறார்கள். இதே காலத்தில் இப்படி கண்மூடித்தனமாக வெறும் வேக கணக்கை மட்டும் வைத்து விருது கொடுப்பது சரியான விஷயம் இல்லை.
ஐ.பி.எல் தொடர் பல வீரர்களின் திறமைக்கு ஒரு வெளிச்சம் ஏற்படுத்தி தரும் மாபெரும் தளமாக இருக்கிறது. அப்படியான ஒரு தொடரில் இந்த மாதிரியான விருதுகள் பெரும் ஏமாற்றத்தை தருகிறது. அடுத்த தலைமுறை வீரர்களுக்கு இது ஒரு தவறான முன்னோட்டமாக அமைந்து வெறும் வேகத்தை குறிக்கோளாக கொண்டு பந்து வீசத்தொடங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. வெறுமனே சிக்ஸரின் தூரத்திற்கும், பந்தின் வேகத்திற்கும் ஆன விளையாட்டு அல்ல கிரிக்கெட். திறமை மூளை இரண்டையும் இணைக்கும் விளையாட்டு இது. மேலும் ஒரு விருது மற்ற வீரர்களை ஊக்கமளிக்கவும் மகிழ்ச்சியடையவும் செய்ய வேண்டுமே தவிர மற்ற வீரர்களுக்கு ஏமாற்றம் அளிக்க கூடாது. குறிப்பாக, இந்த விருதுகள் உம்ரான் மாலிக் போன்ற இளம் வீரர்களுக்கு நல்லதல்ல. அவரையும் வருண் ஆரோன் வரிசையில் நாம் சேர்த்துவிடக்கூடாது!