Viral Video: மரண பயத்தை காட்டிட்டாங்க பரமா… ரஷ்ய வீரரை நடுங்க வைத்த உக்ரைன் ட்ரோன்…

ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் 6 வாரங்களை கடந்து நீடித்து வருகிறது. தொடக்கத்தில் உக்ரைனை ஆக்கிரமித்து புதிய ஆட்சியாளரை நியமிப்போம் என சூளுரைத்த ரஷ்யா தற்போது கடும் பின்னடைவை சந்தித்து வருகிறது. உக்ரைன் வீரர்களின் துணிச்சலான பதிலடி தாக்குதலால் தலைநகர் கீவ் மற்றும் பிற முக்கிய நகரங்களில் இருந்து ரஷ்ய படைகள் பின்வாங்கி வருகின்றன. 

தங்களின் திட்டங்கள் எல்லாம் தவிடுபொடியானதால் ரஷ்ய ராணுவ வீரர்கள் கடும் விரக்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பின்வாங்கும் நடவடிக்கையின்போது பொதுமக்கள் மீது ரஷ்ய ராணுவம் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தி வருகிறது. தலைநகர் கீயவின் புறநகர பகுதியான புச்சாவில் ரஷ்யா ராணுவத்தால் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

இதனிடையே ரஷ்யாவின் இந்த பின்வாங்கும் நடவடிக்கையை உக்ரைன் ராணுவம் தனக்கு சாதகமாக பயன்படுத்தி தடுப்பு தாக்குதலில் இருந்து முன்னேறி தாக்கும் உத்திக்கு மாறியுள்ளது. உக்ரைனில் சுற்றித்திரியும் ரஷ்ய வீரர்களை குறிவைத்து உக்ரைன் ராணுவம் ட்ரோன் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. 

மேலும் படிக்க | உக்ரைன் மீது ரஷ்யா உயிரியல் ஆயுதங்களை பயன்படுத்தக்கூடும்: அமெரிக்கா எச்சரிக்கை

அந்த வகையில் உக்ரைனுக்குள் முகாமிட்டுள்ள ரஷ்ய ராணுவ நிலையங்களை கண்டறிந்து உக்ரைன் ராணுவம் சுட்டுத்தள்ளி வருகிறது. உக்ரைனுக்குள் சுற்றித்திரியும் ரஷ்ய ராணுவ வீரர்களை உக்ரைன் ராணுவத்தின் ஆளில்லா விமானங்கள் தாக்கி அழித்து வருகின்றன. 

 

 

இதுபோன்ற தாக்குதல் ஒன்றில் ரஷ்ய ராணுவ வீரர்கள் சிலர் ஓடி ஒளிந்துகொண்டனர். ஆனால் ஒரு வீரர் மட்டும் ஆளில்லா விமானத்திடம் மாட்டிக்கொண்டு தப்பிப்பதற்காக உயிர் பயத்தில் தலைதெறிக்க ஓடும் காட்சி வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

மேலும், உக்ரைனில் நிலைக்கொண்டிருந்த ரஷ்ய துருப்புகளை உக்ரைன் ராணுவம் தனது ஆளில்லா விமானம் மூலம் தாக்கி அழித்தது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. உக்ரைனில் கடும் பின்னடைவை சந்தித்து வரும் ரஷ்ய ராணுவம் ஒரு கவுரவமான வெற்றியை பெறும் நோக்கில் படைகளை பின்நகர்த்தி கிழக்கு உக்ரைனை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | நேட்டோவை நம்பி தவறு செய்த உக்ரைன்! ரஷ்யாவுக்கு எதிராக உலக நாடுகள் எடுத்த நடவடிக்கை என்ன?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.