புதிய மின்னணு ரேஷன் அட்டைகள் பயனாளிகளின் இருப்பிடத்துக்கே அஞ்சலில் அனுப்பப்படும் என்று சட்டப்பேரவையில் உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் உணவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடந்தது. இதில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை அமைச்சர் அர.சக்கரபாணி பதில் அளித்தார். பல அறிவிப்புகளையும் வெளியிட்டார். அவர் கூறியதாவது:
திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற 10 மாத காலத்தில் புதிதாக 11.03 லட்சம் பயனாளிகளுக்கு மின்னணு ரேஷன் அட்டைகள் வழங்கி சாதனை படைத்துள்ளோம். புதிய மின்னணு ரேஷன் அட்டைகள் பயனாளிகளின் இருப்பிடத்துக்கே அஞ்சலில் அனுப்பப்படும்.
ரேஷன் கடைகளில் உளுந்து,கூடுதல் சர்க்கரை வழங்கப்படும் என்று முதல்வர் உறுதி அளித்துள்ளார். அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படும். 2 கிலோ அரிசிக்கு பதில்2 கிலோ கேழ்வரகு வழங்கும் திட்டம்நீலகிரி, தருமபுரி மாவட்டங்களில் முன்னோடி திட்டமாக செயல்படுத்தப்படும்.
ரேஷன் கடையில் பயோ மெட்ரிக் (விரல் ரேகை) பதிவு செய்வதில் சுமார் 20 சதவீதம் பேர் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இதைதவிர்க்க, புதிய திட்டத்தை முதல்வர்விரைவில் அறிவிப்பார். 1,000 அட்டைகளுக்கு ஒரு ரேஷன் கடை என்ற புதிய திட்டத்தையும் விரைவில் அறிவிப்பார். மாநில, மாவட்ட அளவில் சிறந்த ரேஷன் கடை விற்பனையாளர்கள், எடையாளர்களை தேர்வு செய்து பரிசுகள் வழங்கப்படும்.
நெல் கொள்முதல் நிலையங்களில் 34,574 பணியாளர்கள் பயன்பெறும் வகையில் மூட்டை தூக்கும் கூலியை உயர்த்தியுள்ளோம்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்துக்கு (டிஎன்சிஎஸ்சி) சொந்தமான 260 கிடங்கு வளாகங்களில் நபார்டு வங்கி உதவியுடன் ரூ.90 கோடியில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
டிஎன்சிஎஸ்சி ரூ.50 கோடியில் முழுமையாக கணினிமயம் ஆக்கப்படும்.
நபார்டு வங்கி உதவியுடன் ரூ.70.75 கோடியில் கான்கிரீட் தரை, மேற்கூரை அமைப்புடன் கூடிய நெல் சேமிப்பு தளங்கள் அமைக்கப்படும். ராணிப்பேட்டை, திருமங்கலம் சேமிப்பு கிடங்கு வளாகங்களில் தலா 3,400 டன் கொள்ளளவு கொண்ட புதிய சேமிப்பு கிட்டங்கிகள் கட்டப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.