அதிகரிக்கும் கரோனா: 5 மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை; 5 நடவடிக்கைகளைப் பின்பற்ற அறிவுரை

புதுடெல்லி: இந்தியாவில் கரோனா மூன்றாவது அலை முடிந்து படிப்படியாக தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், கடந்த வார புள்ளிவிவரப்படி 5 மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.குறிப்பாக கேரளாவில் கடந்த வாரம் புதிதாக 2,321 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது ஒட்டுமொத்த இந்திய பாதிப்பில் 31.8 சதவீதம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, சீனாவில் கரோனா மீண்டும் வேகமாகப் பரவி வருகிறது. சீனாவில் தற்போது பிஏ.2 என்ற ஒமிக்ரான் வகை கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ், “அன்றாடம் உலகம் முழுவதும் 1.5 மில்லியன் பேருக்கு கரோனா உறுதியாகிறது. ஐரோப்பியாவில் இன்னொரு கரோனா அலை உருவாகியுள்ளது. ஆசியாவில் பல நாடுகளிலும் கரோனா பரவிவருகிறது. சில நாடுகளில் பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து இல்லாத அளவுக்கு கரோனா மரணங்கள் பதிவாகின்றன. இந்தச் சூழலில் உலகில் ஒவ்வொருவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் மத்திய பாதுகாப்பு துறை செயலர் ராஜேஷ் பூஷன், 5 மாநிலங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், “மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் சமூக, பொருளாதார நடவடிக்கைகளுக்கு முழு வீச்சில் அனுமதியளித்துள்ள நிலையில் கரோனா நிலவரம் குறித்தும் தொடர் கண்காணிப்பு அவசியமாகிறது” என்று ராஜேஷ் பூஷன் குறிப்பிட்டுள்ளார்.

கேரளா, மிசோரம், மகாராஷ்டிரா, டெல்லி, ஹரியாணா மாநிலங்களுக்கு இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

கேரளாவில் கடந்த வாரம் புதிதாக 2,321 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது ஒட்டுமொத்த இந்திய பாதிப்பில் 31.8 சதவீதம். மாநிலத்தில் வாராந்திர பாசிடிவிட்டி விகிதம் (அதாவது 100 பேரில் எத்தனை பேருக்கு தொற்று உறுதியாகிறது என்ற தொற்று விகிதம்) 13.45%ல் இருந்து 15.53% ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல் டெல்லியில் கடந்த வாரம் புதிதாக 826 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. ஏப்ரல் 1 உடன் முடிந்த வாரத்தில் 724 பேருக்கு தான் தொற்று ஏற்பட்டிருந்தது. டெல்லியில் வாராந்திர பாசிடிவிட்டி விகிதம், 1.25%த்தில் இருந்து 0.51 சதவீதமாக அதிகரித்துள்ளது.

ஹரியாணாவில் கடந்த வாரம் புதிதாக 417 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அதற்கும் முந்தைய வாரம் 367 பேருக்கு மட்டுமே தொற்று இருந்த நிலையில் வாராந்திர பாசிடிவிட்டி விகிதம் 1.06% ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவில் புதிதாக794 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. ஒட்டுமொத்த இந்திய பாதிப்பில் மகாராஷ்டிராவின் பங்கு 10.9%. அங்கு வாராந்திர பாசிடிவிட்டி விகிதம் 0.39%ல் இருந்து 0.43% ஆக அதிகரித்துள்ளது.

மிசோரம் மாநிலத்தில் கடந்த வாரம் 814 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அங்கு கடந்த வாரம் பாசிடிவிட்டி விகிதம் 14.38%ல் இருந்து 16.48% ஆக அதிகரித்துள்ளது.

5 நடவடிக்கைகளைப் பின்பற்றுக.. இந்நிலையில் கரோனா தொற்று அதிகரித்து வரும் மாநிலங்கள் கரோனா பரிசோதனை, தொற்று தொடர்பு கண்டறிதல், சிகிச்சை, தடுப்பூசி செலுத்துதல், கரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுதல் போன்ற நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு இந்த 5 மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.