அதிமுக ஆட்சியில் 750 கூட்டுறவு கடன் சங்கங்களில் ரூ.482 கோடி அளவில் ஊழல் நடந்துள்ளது. இதுகுறித்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படுவதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் கூட்டுறவு, உணவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடந்தது. அதில் முன்னாள் கூட்டுறவுத் துறைஅமைச்சர் செல்லூர் ராஜூ பேசும்போது, ‘‘வேளாண் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடியில் முரண்பட்ட தகவல்கள் வருகின்றன. பொங்கல் பரிசுத் தொகுப்பு தரமானதாக இல்லை. கூட்டுறவு சங்க முறைகேடுகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. மகளிர் குழு, நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அதற்கானதொகையை கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கவில்லை. மகளிர் குழுக்களுக்கு முறையாக கடன் வழங்குவது இல்லை’’ என்றார்.
இதற்கு கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பதில் அளித்து பேசியதாவது: தமிழகம் முழுவதும் 4,451 கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. இவற்றில் கடந்த அதிமுக ஆட்சியில் 750 சங்கங்களில் ரூ.482 கோடிஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் முறைகேட்டில் ஈடுபட்டவர் மீது நடவடிக்கையே எடுக்கவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கூட்டுறவு சங்க முறைகேடுகள் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் இருப்பதுபோல, கூட்டுறவு சங்க முறைகேடுகளை விசாரித்து விரைந்து தண்டனை பெற்றுத்தர சிறப்பு நீதிமன்றங்கள் ஏற்படுத்தவும் முதல்வருக்கு கோரிக்கை வைக்கிறேன்.
தமிழகத்தில் 1.17 லட்சம் மகளிர் குழுக்கள் உள்ளன. அவற்றில் 15 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர்.இவர்கள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடனை ரத்து செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி, அதன் அடிப்படையில் ரூ.2,674 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
நகைக் கடன் தள்ளுபடி ரூ.6 ஆயிரம் கோடி அறிவிக்கப்பட்டு, பெரும்பாலானவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேற்கூறியவற்றுக்கான தொகைசம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் 2020-21நிதி ஆண்டு மற்றும் அதற்கு முந்தைய 2 நிதி ஆண்டுகளுக்கான மானியத்தை கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கவில்லை. திமுகஅரசு பொறுப்பேற்றதும் ரூ.7,600கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
பொங்கல் பரிசுத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஏலக்காய், முந்திரி, திராட்சை ஆகியவை மொத்தம் 110 கிராமில் வழங்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் இப்பொருள் 1 கிராம் ரூ.1 செலவிலும் திமுகஆட்சியில் 62 பைசா செலவிலும் வாங்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.