பெங்களூரு : அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து ம.ஜ.த.,வில் பெங்களூரில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.பெட்ரோல், டீசல், சமையல் காஸ் உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
விலை வாசி உயர்வை கண்டித்து, பெங்களூரு சுதந்திர பூங்கா அருகில், முன்னாள் முதல்வர் குமாரசாமி தலைமையில், ம.ஜ.த.,வினர் நேற்று போராட்டம் நடத்தினர்.அப்போது அவர் பேசியதாவது:முதலில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. பின் சமையல் காஸ் விலை உயர்ந்தது. அதன் எதிரொலியால் ஓட்டல் உணவு, டாக்சி கார் வாடகை கட்டணம் என ஒன்றன் பின் ஒன்றாக உயர்ந்து வருகிறது.மக்கள் நல அரசு என்று கூறும் பா.ஜ.,வினர், மக்கள் நலனுக்கு என்ன செய்துள்ளனர். பெங்களூரில் சாலைகள் சரியில்லை. மக்கள் இறக்கின்றனர். தரமற்ற பணிகள் நடக்கிறது. கர்நாடக உயர்நீதிமன்றம் தொடர்ந்து அரசை குற்றம்சாட்டுகிறது.எந்த ஒரு பணியாக இருந்தாலும் நீதிமன்றம் தான் உத்தரவிட வேண்டுமா; இல்லை பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்த வேண்டுமா?தேசிய அரசியல் கட்சியினர், எந்த வகையில் தேர்தல் நடத்துகின்றனர் என்று நன்றாக தெரியும். காங்கிரஸ், பா.ஜ.,வினருக்கு கன்னடர்கள், மாநிலத்தை ஒப்பந்தத்திற்கு வழங்கவில்லை என்பதை இரண்டு கட்சியினரும் நினைவில் கொள்ள வேண்டும்.காங்கிரசை எதிர்க்க, பா.ஜ., தலைவர்கள் எனக்கு பணம் கொடுத்திருப்பதாக காங்., தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனக்கு பணம் கொடுத்தது பா.ஜ.,வினர் அல்ல, கன்னடர்கள். ஆம், இரண்டு தேசிய கட்சியினரை விரட்ட அவர்கள் பணம் கொடுத்துள்ளனர்.ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரை நான் திருப்திப்படுத்தவில்லை. அனைத்து சமுதாயத்தினருக்கும் குரல் கொடுக்கிறேன். மாநில மக்களுக்கு சிறந்த வாழ்க்கை ஏற்படுத்த போராடுகிறேன்.என் ஓட்டு விற்பனைக்கு இல்லை என்பது குறித்து, ஒவ்வொரு கிராமத்திலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement