ஆணாக மாற சிகிச்சை – பெரம்பலூரில் மாயமான கல்லூரி மாணவிகள் சென்னையில் மீட்பு!

மாணவி ஒருவர் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ய இருந்த நிலையில், பெற்றோர்களின் புகாரின் பெயரில் போலீஸார் மாணவிகளை மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்த சம்பவம் பெரம்பலூரில் நடந்திருக்கிறது.

போலீஸ்

பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் இருவர் பெரம்பலூர் தனியார் கல்லூரிகளில் பி.எஸ்சி நர்சிங், பி.ஏ ஆங்கிலம் படித்து வருகின்றனர். இந்நிலையில் இரு மாணவிகளும் இரண்டு நாள்களுக்கு முன்பு வீட்டிலிருந்து கல்லூரிக்குச் செல்வதாகச் சொல்லிவிட்டுச் சென்றவர்கள் இரவு வரையிலும் வீட்டுக்கு வராததால் பதற்றம் அடைந்த பெற்றோர்கள் பல இடங்களில் தேடிப் பார்த்தனர்.

எங்குத் தேடியும் கிடைக்காததால், பெரம்பலூர் காவல்நிலையத்தில் இரு மாணவிகளின் பெற்றோர்களும் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்கு பதிவு செய்து பெரம்பலூர் போலீஸார் தீவிரமாகத் தேடிவந்த நிலையில், சென்னையில் இருந்த மாணவிகளை மீட்டு அழைத்து வந்திருக்கிறார்கள்.

பெரம்பலூர் போலீஸார்

என்ன நடந்தது என்று வழக்கை விசாரித்து வரும் போலீஸாரிடம் பேசினோம். “காணாமல் போன இரு மாணவிகளும் குரும்பலூர் அரசுப் பள்ளியில் 6-ம் வகுப்பிலிருந்தே இருவரும் ஒன்றாகப் படித்து வந்திருக்கிறார்கள். நெருங்கிய தோழிகளாக இருந்துள்ளனர். அந்த நட்பு கல்லூரி வரையிலும் தொடர்கிறது. அதில், ஒரு பெண்ணின் செயல்பாடுகள் மட்டும் ஆண்கள் போல் இருப்பதும், அவர் கையில் காப்பு போடுவதும், ஆண்களின் செருப்பு அணிவதும், தலைமுடியை வெட்டிக்கொள்வதுமாக இருந்திருக்கிறார்.

இந்நிலையில் 5-ம் தேதி காலை கல்லூரிப் பேருந்தில் ஏறி கல்லூரி செல்வதாகச் சென்ற மாணவிகள், கல்லூரிக்குச் செல்லாமல் வேறு எங்கோ சென்றிருக்கிறார்கள். இரு மாணவிகளின் செல்போன் நம்பர்களை டிராக் பண்ணும் போது லாடபுரம் லொக்‌ஷேனை காட்டியது. அங்கு விசாரித்தால் கார்த்திக் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்பவரிடம் இவர்கள் பயன்படுத்தும் செல்போன்களை கொடுத்துவிட்டு அந்த பையனுடைய செல்போனை வாங்கிவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.

பெரம்பலூர் எஸ்.பி ஆபிஸ்

கார்த்திக் நம்பரை டிராக் செய்த போது சென்னை போரூரில் ஒரு வீட்டில் தங்கி இருப்பது தெரியவந்துள்ளது. அங்குச் சென்று விசாரிக்கையில் காணாமல் போன மாணவிகள், பாலின மாற்று அறுவை சிகிச்சைக்காக சென்னையில் டீரிட்மெண்ட் எடுக்க வந்திருப்பதாகச் சொன்னார்கள். அன்று மாலையில் மாணவி அறுவை சிகிச்சை செய்ய இருந்த நிலையில் காணவில்லை என பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் மீட்டு அவர்களிடம் ஒப்படைத்தோம்” என்றனர். தற்போது அந்த மாணவிகளுக்கு குழந்தைகள் நல குழுவினர் மனநல ஆலோசனைகளை அளித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.