கர்நாடகம் மற்றும் பெங்களூரின் பெயரைக் கெடுத்து விட்டு முதலீடுகளை இழுக்கும் முயற்சியை தமிழ்நாடும், தெலங்கானாவும் செய்யக் கூடாது என்று அந்த மாநில முதல்வர்
பசவராஜ் பொம்மை
கூறியுள்ளார்.
கரநாடகத்தில் சமீப காலமாக குறிப்பாக பொம்மை முதல்வர் பதவிக்கு வந்த பிறகு மத ரீதியான பிரச்சினைகள் அதிகரிக்க ஆரம்பித்துள்ளன. ஆரம்பத்தில்
ஹிஜாப் பிரச்சினை
வெடித்தது. அது சற்று ஓய்ந்த நிலையில் அடுத்து, இந்துக் கோவில்களுக்கு அருகே இஸ்லாமியர்கள் கடை போட தடை விதிக்கப்பட்டது. இந்தப் பிரச்சினை சற்று தணிந்த நிலையில் அடுத்து ஹலால் உணவு குறித்து விஷமப் பிரசாரங்கள் கிளம்பின.
இந்தப் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கி வைத்து பாங்கு ஓதுவதை கண்டித்தும் ஸ்ரீராம் சேனா அமைப்பு பிரச்சினை கிளப்ப ஆரம்பித்துள்ளது. இப்படி அடுத்தடுத்து மத ரீதியில், குறிப்பிட்ட மதத்தைக் குறி வைத்து நடந்து வரும் செயல்கள் மக்களிடையே முகச் சுளிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பெங்களூருவின் பெயரைக் கெடுக்கும் வகையில் இந்த சம்பவங்கள் இருப்பதாக பலரும் கூற ஆரம்பித்துள்ளனர்.
இந்தக் கருத்தை வலுப்படுத்தும் வகையில், பிரபல பயோகான் தலைவர் கிரண் மஜூம்தாரும், மத ரீதியிலான செயல்பாடுகள் இந்தியாவின் ஐடி தலைநகரம் என்ற தலைமைப் பொறுப்பிலிருந்து கர்நாடகம் விலக வழி வகுத்து விடும். முதல்வர் பொம்மை இதில் தலையிட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து டிவீட் போட்டிருந்தார். இதனால் இந்த விவாதம் பெரிதானது.
மறுபக்கம், கர்நாடகத்திலிருந்து குறிப்பாக பெங்களூரிலிருந்து பல்வேறு நிறுவனங்கள் வெளியேறப் போவதாக தகவல்கள் பரவின. இதைத் தொடர்ந்து பேசாமல் இங்கே வாங்க.. எல்லா வசதியும் இருக்கு. அருமையான விமான நிலையம் இருக்கு என்று கூறி கர்நாடக ஐடி நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார்
தெலங்கானா
அமைச்சரும், முதல்வர் கே.சி.ஆரின் மகனுமான கேடி. ராமாராவ். மறுபக்கம், தமிழ்நாடும் இதில் களம் குதித்தது. பெங்களூரிலிருந்து தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தமிழ்நாட்டுக்கு வர விரும்பினால் அதுகுறித்து
தமிழ்நாடு
அரசு பரிசீலிக்கும் என்று நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறியிருந்தார்.
அதேசமயம், ஓசூரையும் தமிழ்நாடு அரசு மிகப் பெரிய “ஹப்” ஆக மாற்ற திட்டமிட்டுள்ளது. கிட்டத்தட்ட குட்டி பெங்களூர் போல, பெங்களூரில் உள்ள அத்தனை வசதிகளையும் கொண்டதாக ஓசூரை மாற்ற தமிழக அரசு தீர்மானித்துள்ளது. அங்கு விமான நிலையத்தையும் அமைத்து விட்டால், தொழில் வளர்ச்சிக்கான அத்தனை அனுகூலங்களும் ஏற்பட்டு விடும் என்பதால், தமிழ்நாடு அரசு சத்தம் காட்டாமல் இந்த வேலையைச் செய்து வருகிறது. கூடவே, பெங்களூர் மெட்ரோ சேவையை ஓசூர் வரைக்கும் விஸ்தரிக்கவும் தமிழ்நாடு கோரிக்கை விடுத்துள்ளது. அதுவும் நடந்தால் ஓசூர்தான், அடுத்த பெங்களூராக உருவெடுக்க வாய்ப்புள்ளது.
இப்படி அனைத்து வழிகளிலும் பெங்களூரைக் குறி வைத்து தமிழ்நாடும், தெலங்கானாவும் காய் நகர்த்தி வருவதால் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை சற்று எரிச்சலடைந்துள்ளார். இரு மாநிலங்களையும் அவர் தற்போது விமர்சித்துள்ளார். இதுகுறித்து பொம்மை செய்தியாளர்களிடம் பேசுகையில், அவர்கள் என்னதான் செய்தாலும், என்ன மாதிரி பிரசாரம் செய்தாலும் கர்நாடகத்தின் வளர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. பெங்களூரையும், கர்நாடகத்தையும் பிற மாநிலங்களுடன் ஒப்பிட முடியாது. நாம் நமது சொந்த அடிப்படைக் கட்டமைப்பு, திறமையான மனித ஆற்றல் ஆகியவற்றின் அடிப்படையில் வளர்ந்தவர்கள். இந்த வளர்ச்சி தொடருவதற்குத் தேவையான நடவடிக்கைகளை நான் தொடர்ந்து மேற்கொள்வேன்.
தமிழ்நாடு, தெலங்கானாவில் உள்ள முதலீட்டாளர்களை கர்நாடகத்திற்கு வருமாறு நான் அழைத்ததில்லை. கர்நாடகத்திற்கு முதலீடுகள் சீரான அளவில் வந்து கொண்டுல்ளன. வரும் நாட்களில் மேலும் பல சர்வதேச முதலீடுகள் கர்நாடகத்திற்கு வரவுள்ளன. Invest
Karnataka
என்ற மூன்று நாள் மாநாடு நவம்பர் 2ம் தேதி தொடங்கி பெங்களூரில் நடைபெறவுள்ளது.
தங்களது பலவீனத்தை மறைத்து விட்டு, முதலீடுகளை ஈர்ப்பதற்காக பிற மாநிலங்களை தவறாக சித்தரிக்கும் போக்கு சரியானதல்ல. தமிழ்நாடும், தெலங்கானாவும் தாங்கள் பலவீனமானவர்கள் என்பதை இதில் காட்டி விட்டன. இரு மாநிலங்களும் வளர விரும்புகின்றன. அப்படி விரும்பினால் அவர்களது சொந்த பலத்தில் வளரட்டும். அதை நான் தடுக்கப் போவதே இல்லை.
கர்நாடகம் வளர்ந்த மாநிலம், முற்போக்கான மாநிலம். இந்த மாநிலத்தின் பெயரைக் கெடுக்க சில விஷமிகள் முயற்சி செய்து வருகின்றனர் என்று கூறியுள்ளார் பொம்மை.