காந்தி நகர்: குஜராத்தில் ஒருவருக்கு ‘எக்ஸ்இ’ வகை கொரோனா தாக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவி பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்தியது. தற்போது இந்த தொற்று படிப்படியாக குறைந்து வருவதால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் உலகளவில் ஒமிக்ரான் வைரசும், அதன் உருமாற்றங்களான பிஏ-1, பிஏ-2 வைரஸ்கள் மட்டுமே தாக்கி வருகின்றன. இவற்றால் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை. இந்நிலையில் இங்கிலாந்தில் சில நாட்களுக்கு முன் ‘எக்ஸ்இ’ என்ற புதிய உருமாற்ற கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. பிஏ2 ஒமிக்ரானை விட 10 சதவீதம் வேகமாக பரவும் தன்மை கொண்ட இது பிஏ-1 மற்றும் பிஏ-2 வைரஸ்களில் இருந்து உருமாற்றம் அடைந்துள்ளது.இந்த வைரஸ் தற்போது இந்தியாவில் ஊடுருவி விட்டதாகவும் வைரசால் பாதிக்கப்பட்ட முதல் நோயாளி மும்பையில் கண்டறியப்பட்டுள்ளார் என்றும் மும்பை மாநகராட்சி கூடுதல் ஆணையர் உறுபடுத்தியிருந்தார். ஆனால் மும்பையில் உருமாறிய எக்ஸ்இ வகை கொரோனாவால் யாரும் பாதிக்கப்படவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை விளக்கம் அளித்தது. மும்பையில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று மாதிரியை மரபணு நிபுணர்கள் ஆய்வு செய்தனர். இதில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் உடலில் எடுக்கப்பட்ட வைரஸின் மரபணு அமைப்பு, ‘எக்ஸ்இ’ வகை மாறுபாட்டின் மரபணு அமைப்புடன் ஒத்துப்போகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குஜராத்தில் ஒருவருக்கு ‘எக்ஸ்இ’ வகை கொரோனா தாக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது இது தொடர்பாக ஆங்கில செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில்,’குஜராத்தில் எடுக்கப்பட்ட கொரோனா மாதிரி தேசிய நோய் கட்டுப்பாட்டு பிரிவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் செய்யப்பட்ட மரபணு சோதனையில் அந்த நோயாளிக்கு ‘எக்ஸ்இ’ கொரோனா தாக்கி இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. ‘எக்ஸ்இ’ கொரோனா நோயாளிகளுக்கு இருக்கும் மரபணு இவரின் கொரோனா மாதிரியில் இருந்துள்ளது,’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தகவலை தேசிய ஜீனோம் கழகமோ, மத்திய அரசோ இன்னும் உறுதிப்படுத்தவில்லை. குஜராத்தில் இருக்கும் ஜீனோம் ஆராய்ச்சி மையத்தின் நிர்வாகி ஒருவர் இதை உறுதி செய்துள்ளார்.