குஜராத் மாநிலத்தில் கொரோனா தொற்றின் திரிபான எக்ஸ்.இ வகை கொரோனா தொற்று ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இந்தியாவில், கடந்த ஜனவரி மாத இறுதியில், கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையின் தாக்கம் குறைந்து வந்தது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டன. கொரோனா மூன்றாவது அலைக்கு
ஒமைக்ரான்
தொற்று முக்கிய காரணமாக அமைந்தது. ஒமைக்ரான் தொற்று அதி வேகமாகப் பரவினாலும் கூட, அதிகளவில் உயிரிழப்பை ஏற்படுத்தவில்லை.
இந்தியாவில் கொரோனா பரவல் முற்றிலும் குறைந்ததை அடுத்து, கடந்த மார்ச் மாதம் 31 ஆம் தேதியுடன் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு திரும்பப் பெற்றது. மேலும் கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பாக அந்தந்த மாநில அரசுகள் முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தி இருந்தது. இதற்கிடையே, ஐரோப்பிய நாடான பிரிட்டனில், ஒமைக்ரான் வகை தொற்றின் திரிபான எக்ஸ்.இ வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இந்த வகை தொற்று ஒமைக்ரானை விட அதி வேகமாகப் பரவக் கூடியது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து குஜராத் மாநிலம் வதோதராவுக்கு வந்த 67 வயது முதியவர் ஒருவருக்கு ஒமைக்ரான் திரிபான எக்ஸ்.இ வகை தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இவருக்கு கடந்த மார்ச் மாதம் 12 ஆம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாகவும், பரிசோதனையில், எக்ஸ்.இ வகை கொரோனா தொற்று என்பதும் கண்டறியப்பட்டது.
முன்னதாக, மும்பையைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு எக்ஸ்.இ வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாக தகவல் வெளியானது. பரிசோதனையில்
புதிய வகை கொரோனா
தொற்றில்லை என்பது தெரிய வந்தது. நாட்டிலேயே முதன் முறையாக குஜராத் மாநிலத்தில், அதி வேகமாகப் பரவக் கூடிய எக்ஸ். இ வகை கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதால், பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதனால் மீண்டும்
முழு ஊரடங்கு
அமலாகுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.