“இந்தியாவை உங்களுக்கு அவ்வளவு பிடித்திருந்தால் அங்கேயே சென்றுவிடுங்கள்” என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மரியம் நவாஸ் அறிவுரை வழங்கியுள்ளார்.
பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு, பிரதமர் இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற்று வருகிறது. இம்ரான் கான் அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை பல கூட்டணிக் கட்சிகள் வாபஸ் பெற்றுவிட்டதால் அவரது ஆட்சி கவிழ்வது உறுதியாகி உள்ளது. இந்த சூழலில், நேற்று இரவு பாகிஸ்தான் மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் பிரதமர் இம்ரான் கான் உரையாற்றினார். அப்போது அவர் இந்தியாவை புகழ்ந்து பேசினார்.
அவர் பேசுகையில், “உலகின் எந்த வல்லரசு நாடும் இந்தியர்களின் நலன்களுக்கு எதிராக செயல்படும்படி இந்தியாவை வற்புறுத்த முடியாது. பொருளாதாரத் தடைகளுக்கு பிறகும் கூட, ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை இந்தியா வாங்கி வருகிறது. எந்த நாடாலும் இந்தியாவை சர்வாதிகாரத்தனத்துடன் வழிநடத்த முடியாது. ஐரோப்பிய யூனியனின் தூதர்கள் பாகிஸ்தானுக்கு உத்தரவிடுவது போல, இந்தியாவுக்கு உத்தரவிட முடியுமா? முடியாது. ஏனென்றால் இந்தியா ஒரு இறையாண்மை மிக்க நாடு” என அவர் கூறினார்.
இந்தியாவை இவ்வாறு புகழ்ந்ததற்காக இம்ரான் கானுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பிரதான எதிர்க்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் துணைத் தலைவர் மரியம் நவாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “உங்களுக்கு (இம்ரான் கான்) இந்தியாவை அவ்வளவு பிடித்திருக்கிறது என்றால், அங்கேயே நீங்களும் சென்றுவிடுங்கள். பாகிஸ்தான் வாழ்க்கையை விட்டுவிடுங்கள். அதிகாரம் பறிபோவதால் இம்ரான் கானுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது” என அவர் கூறியிருக்கிறார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM