இந்தி குறித்து அமித் ஷா கூறிய கருத்து மாநில உரிமைகளை பறிக்கும் செயலாக உள்ளது. தனது கருத்தை அமித்ஷா திரும்பப்பெற வேண்டும் என புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாராளுமன்ற மொழிகளுக்கான நிலைக்குழுவில் பேசும்போது, நாட்டில் இந்தி மட்டும் தான் முதன்மையான மொழியாக இருக்க வேண்டும் என்று பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் குரல்கள் ஒலிக்கத் துவங்கியுள்ளன.
இந்நிலையில். செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி முன்னாள் அமைச்சர் நாராயணசாமி பேசும்போது, “அமித் ஷா சொன்ன கருத்து மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, மாநிலத்திற்கு மாநிலம் மொழி மாறுகிறது, இந்தி மொழி குறித்து அமித் ஷா கூறிய கருத்து அனைத்து மாநில மொழிகளுக்கும் எதிரான கருத்தாக உள்ளது. எனவே இந்தி குறித்து அமித் ஷா கூறிய கருத்து மாநில உரிமைகளை பறிக்கும் செயலாக உள்ளது.
நாட்டில் இந்தி திணிப்பை மக்கள் ஒருகாலமும் ஏற்க மாட்டார்கள். அமித் ஷா அவரது கருத்தை திரும்பபெற வேண்டும். புதுச்சேரியை பொறுத்தவரை பாஜகவிடம் முதல்வர் சரணடைந்து விட்டாரா?. முதல்வர் முதுகெலும்போடு இருக்க வேண்டும், நாற்காலிக்காக ஆசைப்பட்டு பாஜகவின் அடிமையாக முதல்வர் ரங்கசாமி இருக்கக் கூடாது” என்றார்.
மேலும், “மக்களால் தாங்க முடியாத நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் மின் கட்டனம் உயர்ந்துள்ளது. மின் கூட்டண உயர்வால் தொழிற்சாலைகள் மூடப்படும் சூழல் எற்படும் எனவே மின் துறையை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை வாபஸ் பெற வேண்டும். இதேபோல் மின் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும்” என நாராயணசாமி தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM