புதுடெல்லி: முதல் 2 தவணைகளில் போடப்பட்ட கரோனா தடுப்பூசி மருந்தையே பூஸ்டர் தடுப்பூசிக்கும் பயன்படுத்த வேண்டும் என அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
கரோனா தொற்று மேலும் பரவாமல் தடுக்க, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும், தனியார் மருத்துவமனை தடுப்பூசி மையங்களில் இன்று முதல் 3-வது தவணையாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது.
இதற்கான நடைமுறைகள் குறித்து, மாநிலங்களின் சுகாதாரத் துறை செயலாளர்களுடன், மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் நேற்று காணொலிமூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:
முன்னெச்சரிக்கையாக போடப்படும் கரோனா பூஸ்டர் தடுப்பூசிக்கு, ஒருவருக்கு முதல் 2 தவணைகளில் போடப்பட்ட அதே தடுப்பூசி மருந்தையே பயன்படுத்த வேண்டும். இதற்காக தனியார் மருத்துவமனை மையங்கள் கரோனா தடுப்பூசி மருந்தின் விலையோடு கூடுதலாக ரூ.150 வரை சேவைக் கட்டணமாக வசூலிக்கலாம்.
18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் ஆகியிருந்தால், அவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியுடைவர்கள். 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள், கோவின் இணையளத்தில் ஏற்கெனவே பதிவு செய்துள்ளதால், அவர்கள் பூஸ்டர் தடுப்பூசிக்கு முன்பதிவு செய்யத் தேவையில்லை.
ஆனால், பூஸ்டர் தடுப்பூசி செலுத்திய விவரம், கோவின் இணையளத்தில் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும். மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம், முன்பு வெளியிட்ட வழிகாட்டுதல்களை தனியார் கரோனா தடுப்பூசி மையங்கள் பின்பற்ற வேண்டும். பூஸ்டர் தடுப்பூசி செலுத்த, மருந்தின் விலைக்கு மேலாக ரூ.150 வரை சேவை கட்டணமாக வசூலித்துக் கொள்ளலாம்.
சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ே்டார், பூஸ்டர் தடுப்பூசியை, அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவோ அல்லது தனியார் மையங்களில் பணம் செலுத்தி்யோ போட்டுக் கொள்ளலாம்.
12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக செலுத்தப்படும் தடுப்பூசி திட்டத்தையும் மாநிலங்கள் தொடர்ந்து துரிதமாக செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
விலை குறைப்பு
கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை ரூ.600 ஆக இருந்தது. மத்திய அரசுடன் நடத்திய ஆலோசனைக்குப்பின் இதை ரூ.225-க்கு வழங்க முடிவு செய்யப்பட்டதாக இந்திய சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆதார் பூனாவாலா கூறியுள்ளார்.
இதேபோல் ரூ.1,200-க்கு விற்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசி விலையையும் ரூ.225-ஆக குறைக்க முடிவு செய்துள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனத்தின் துணை நிறுவனர் சுசித்ராவும் தெரிவித்துள்ளார்.