திருப்பூரில் பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த நிலையில், பெண்ணை அழைத்துச் செல்ல கூட்டமாக வந்த அவரது உறவினர்களை தடியடி எச்சரிக்கை விடுத்து போலீசார் அப்புறப்படுத்தினர்.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நாதாராம் என்பவர் அனுப்பர்பாளையத்தில் மின்சாதனப் பொருட்கள் கடை வைத்து நடத்தி வருகிறார்.
அவருக்கு உதவியாக 19 வயதான அவரது மகள் சோபியா குமாரி கடையை கவனித்து வந்துள்ளார். இவரது கடை அருகே உள்ள செல்போன் கடை ஒன்றில் முரளி என்ற இளைஞன் பணியாற்றி வந்துள்ளார்.
நாதாராம் இல்லாத நேரங்களில் முரளியும் சோபியாகுமாரியும் பழகத் தொடங்கி காதலாக மாறி இருக்கிறது. கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடி, காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தது.
தகவலறிந்து வந்து தனது உறவினர்கள் அழைத்தபோது, சோபியாகுமாரி செல்ல மறுத்த நிலையில் அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வேறு வழியின்றி அதிரடிப்படையை வரவழைத்த போலீசார், தடியடி நடத்துவோம் என எச்சரித்து, பெண்ணின் உறவினர்களை அப்புறப்படுத்தினர்.