கொழும்பு: இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலக வலியுறுத்தி அதிபர் மாளிகை நேற்று முற்றுகையிடப்பட்டது. இதுவரை இல்லாத அளவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 1948-ல் இலங்கை சுதந்திரம் அடைந்த பிறகு அந்நாடு முதல் முறையாக மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. கரோனா பெருந்தொற்றுக்கு பிறகு இலங்கையில் அந்நியச் செலாவணி கையிருப்பு வரலாறு காணாத வகையில் சரிந்ததால் அந்நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. உணவுப் பொருட்கள் மற்றும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அவற்றின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளன.
இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்கள், அரசுக்கு எதிராக வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச, அதிபர் கோத்தபய ராஜபக்ச இருவரும் பதவி விலக வேண்டும் என மக்கள் தன்னெழுச்சியாக இந்த போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக நேற்று கொழும்பு நகரில் அதிபர் செயலகத்துக்கு எதிரில் உள்ள காலிமுகத் திடலில் மிகப்பெரிய போராட்டத்துக்கு வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. இதனால் நேற்று காலையில் இருந்தே நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் போராட்டக்காரர்கள் தங்களது வாகனங்கள் மூலமும் பேருந்துகள், ரயில் மூலமாகவும் இந்தப் பகுதியில் குவியத் தொடங்கினர்.
அதிபர் செயலகம் மற்றும் நாடாளுமன்றத்துக்கு எதிரில் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள இந்தப் பிரதான பகுதியில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு தேசியக் கொடி ஏந்தியும் உடலில் வண்ணங்களை பூசிக்கொண்டும் மேளம் முழங்கியும் கோஷங்களை எழுப்பினர். அதிபர் பதவி விலக வலியுறுத்திய பதாகைகளும் அவர்கள் ஏந்தியிருந்தனர்.
போராட்டக்காரர்கள் கூறும்போது, “இங்கு போராடி வரும் அனைவரும் அப்பாவி மக்கள். நாங்கள் வாழ்வதற்காக போராடுகிறோம். இந்த அரசு பதவி விலக வேண்டும். திறமையான ஒருவர் நாட்டை வழிநடத்த வேண்டும்” என்றனர்.
இந்தப் போராட்டத்தையொட்டி பெரும் எண்ணிக்கையில் போலீஸார் குவிக்கப்பட்டனர். தேவைப்பட்டால் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் தண்ணீரை பீய்ச்சியடித்தும் கூட்டத்தைக் கலைக்க தயார் நிலையில் போலீஸார் நிறுத்தப்பட்டிருந்தனர். போராட்டத்தை முன்னிட்டு காலிமுகத் திடல்பகுதியில் இணையதள வசதி உள்ளிட்ட தொலைத் தொடர்பு சேவைகள் முடக்கப்பட்டிருந்தன.
இதேபோல் கொழும்புவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பும் நேற்று போராட்டம் நடைபெற்றது. இதில் “ராஜபக்ச குடும்பத்தினருக்கு அமெரிக்காவில் உள்ள சொத்துக்களை முடக்கி அந்தப் பணத்தை உணவுப் பொருள் மற்றும் எரிபொருட்கள் தட்டுப்பாட்டால் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு அனுப்ப வேண்டும்” என அப்போது போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
கொழும்பு நகருக்கு வடக்கே உள்ள நீர்கொழும்பு நகரில் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் மால்கம் ரஞ்சித் தலைமையிலும் போராட்டம் நடந்தது. ராஜபக்ச நிர்வாகம் பதவி விலகும் வரை போராட்டத்தை தொடருமாறு இதில் மக்களுக்கு அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.
கோத்தபய ராஜபக்சவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு இலங்கையில் தொழில் சமூகத்தினர் பெருமளவு நிதி அளித்திருந்தனர். அவர்களும் தற்போது அதிபர் பதவியில் இருந்து கோத்தபய விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து இலங்கை ரப்பர் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ரோகன் மசகோரல கூறும்போது, “தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார முடக்கத்தை இதற்கு மேலும் தொடர முடியாது. அதிகபட்சம் ஒரு வாரத்துக்குள் எங்களுக்கு அமைச்சரவையும் இடைக்கால அரசாங்கமும் தேவை” என்றார்.
எரிபொருள் பற்றாக்குறையால் மட்டும் தினமும் 5 கோடி டாலர் நஷ்டம் ஏற்படுவதாக தொழில் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக நந்தலால் வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவதை தடுக்கும் முயற்சியாக நேற்று முன்தினம் மிகப்பெரிய வட்டி விகித உயர்வை நடைமுறைப்படுத்தினார்.
இவர் கூறும்போது, “இறக்குமதிகளுக்கு நிதியளிக்க அரசிடம் அமெரிக்க டாலர்கள் இல்லை. பணக் கொள்கையில் தொடர்ச்சியான தவறுகளே தற்போதைய நெருக்கடிக்கு வழிவகுத்தது. நாங்கள் தற்போது நிலைமை மேலும் மோசமாகாமல் தடுக்கும் முயற்சியில் உள்ளோம்” என்றார்.
இந்நிலையில் சர்வதேச செலாவணி நிதியத்துடன் அடுத்த வராம் பேச்சுவார்த்தை நடத்த இலங்கை அரசு தயாராகி வருவதாக நிதியமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக இலங்கையில் புதிய நிதியமைச்சர் அலிசப்ரி நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை கூறும்போது, “இலங்கையின் வர்த்தகச் சமநிலைக்கு ஆதரவாக சர்வதேச செலாவணி நிதியத்திடம் இருந்து அடுத்த 3 ஆண்டுகளில் 3 பில்லியன் டாலர் நிதியுதவியை எதிர்பார்க்கிறோம். ஆண்டுக்கு 1 பில்லியன் டாலர் என்ற அடிப்படையில் இந்த உதவி கிடைக்கும் என நம்புகிறோம். கடனை திரும்ப செலுத்துவற்கான தவணைத் தொகையை சிறிது காலம் தள்ளி வைக்கவும் இலங்கை கோரும்” என்றார்.