கொழும்பு: இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஒருபுறம் அரசியல் குழப்பங்கள் மறுபுறம் என நாளுக்கு நாள் சிக்கல் வலுத்துவரும் நிலையில், அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பாலவேகய (எஸ்ஜேபி) கட்சி அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானாமும் அதிபரை விசாரணைக்கு உட்படுத்தும் இம்பீச்மென்ட் தீர்மானமும் கொண்டு வரத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளது.
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உணவுப் பொருட்கள், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. 13 மணி நேரம் வரை மின்வெட்டு நீடிப்பதால் மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வந்த நிலையில், இலங்கை அமைச்சர்கள் அனைவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதையடுத்து, இடைக்கால அமைச்சரவையைக் கொண்டு கோத்தபய ராஜபக்சே ஆட்சியை நடத்திவருகிறார்.
இந்நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி மக்கள் போராட்டம் ஓயாமல் நடக்கிறது. நேற்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றம் நடந்துகொண்டிருந்த வேளையில் அதற்கு வெளியில் இலங்கையில் உள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் போலீஸாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பதற்றம் நீடித்தது.
இந்நிலையில் தான் அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பாலவேகய (எஸ்ஜேபி) கட்சி அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானாம் கொண்டுவந்த அதிபரை விசாரணைக்கு உட்படுத்தும் இம்பீச்மென்ட் தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கும் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளது. இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா, “அதிபர் பதவி விலக வேண்டும். அனைத்து அதிகாரங்களையும் அவரே கையில் வைத்துள்ளார். அதிகாரங்கள் நாடாளுமன்ற துறை, நீதித்துறை, நிர்வாகத்துறை எனப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்” என்றார்.
வட்டி விகிதங்கள் அதிகரிப்பு.. இதற்கிடையில் இலங்கையின் மத்திய வங்கி வட்டி விகிதத்தை இருமடங்காக அதிகரித்துள்ளது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகிதங்கள் 700 அடிப்படைப் புள்ளிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய நிதியமைச்சர் அலி சப்ரி, “நாட்டின் கடனை மறுசீரமைக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். கடன் திருப்பிச் செலுத்தாத ஒழுங்கின்மை மிகப்பெரிய ஆபத்தை உருவாக்கும். நமது வர்த்தக பற்றாக்குறை 8 பில்லியன் டாலராக உள்ளது. நாம் நமது மக்களுக்கு உணவை உறுதி செய்யப்போகிறோமா இல்லை கடனை திருப்பிச் செலுத்தப் போகிறோமா என்பதை உறுதி செய்ய வேண்டும். கடனை திருப்பிச் செலுத்தாவிட்டால் விளைவுகள் மோசமாக இருக்கும். அதனால் மக்களைப் பாதுகாக்கும் வேளையில், கடனை மறுசீரமைப்பு செய்து திருப்பிச் செலுத்த வேண்டும்” என்று பேசினார்.