சென்னை: உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய மாணவர்கள் மருத்துவக் கல்வியைதொடர்வதற்கு தமிழக அரசு அனைத்துஉதவிகளையும் செய்யும் என்று முதல்வர் உத்தரவாதம் அளித்துள்ளதாக பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், உக்ரைனில் இருந்துதமிழகம் திரும்பிய மருத்துவ மாணவர்கள் கல்வியை தொடர்வது குறித்த சிறப்புகவனஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதன் மீது உறுப்பினர்கள் பேசினர்.
நா.எழிலன் (திமுக): தமிழகத்தில்தான் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள் அதிக அளவில் உள்ளன. மருத்துவம் மாநிலப் பட்டியலில் இருந்தால், பேரவையில் சட்டத் திருத்தம் கொண்டுவந்து, அவர்களை இங்கேயே மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்க இயலும். இதில் மாநில உரிமையை வலியுறுத்துகிறேன்.
அக்ரி கிருஷ்ணமூர்த்தி (அதிமுக): உக்ரைனில் இருந்து மீட்டு வரப்பட்ட மாணவர்கள் ஹங்கேரி, போலந்து நாடுகளில் படிப்பை தொடர பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இடையூறின்றி அவர்கள் மருத்துவப் படிப்பை தொடர மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.
தொடர்ந்து, செல்வப் பெருந்தகை (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பாமக), சிந்தனைச் செல்வன் (விசிக), மாரிமுத்து (இந்திய கம்யூனிஸ்ட்), நாகை மாலி (மார்க்சிஸ்ட்), சதன் திருமலைக்குமார் (மதிமுக),வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி) ஆகியோரும் மாணவர்கள் படிப்பைதொடர நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர்.
இதற்கு பதில் அளித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: உக்ரைன் போரில் சிக்கித் தவித்த 1,890 மாணவர்களை தமிழகத்துக்கு கொண்டு சேர்த்த பெருமை முதல்வரையே சாரும்.
‘மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக் கூடாது. அவர்களது கல்வி தொடர மத்திய அரசு உறுதுணையாக இருக்க வேண்டும்’ என்று கடந்த மாதம் 7-ம் தேதி பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் கேட்டுக் கொண்டார். மார்ச் 31-ம் தேதி பிரதமரை சந்தித்தபோது, நேரிலும் வலியுறுத்தினார். நாங்கள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை சந்தித்தபோதும் இதுகுறித்து வலியுறுத்தினோம்.
அந்த மாணவர்கள் இங்கேயே படிப்பதற்கோ, வெளிநாட்டில் படிப்பதற்கோ மத்திய அரசு நடவடிக்கை எடுத்தால், அவர்களுக்கு தேவையான எல்லா உதவிகளையும் தமிழக அரசு செய்யும் என்ற உத்தரவாதத்தையும் முதல்வர் அளித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.