சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை இரண்டாமாண்டு பயிலக்கூடிய மாணவி ஒருவர் சமீபத்தில், தனது துறை உதவி பேராசிரியர் பிரேம் குமார் என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், தன்னை சாதி பெயரைக்கூறி திட்டியதாகவும் சூரமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் உதவி ஆணையர் தலைமையிலான போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று பல்கலைக்கழக உதவி பேராசிரியர் பிரேம் குமாரின் மனைவி கண்ணீர்விட்டு அழும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அதில் அவர், “கடந்த சில தினங்களாக என்னுடைய கணவர் குறித்து ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் செய்திகள் பரவுவதை பார்த்திருப்பீர்கள். பல்கலைக்கழக நிர்வாகத்தை எதிர்த்து ஒரு ஆசிரியர் சங்க பொதுச் செயலாளராக கேள்வி கேட்டதால், அவரை சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க, அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து நிலுவையில் இருக்கு. தற்போது அவ்வழக்கு எனது கணவருக்கு சாதகமாக வரும் நேரத்துல, பல்கலைக்கழகம் என்னுடைய கணவரை பழிவாங்குனும்னு ஒரு பெண்ணை தூண்டிவிட்டு எனது கணவர் மேல காவல் நிலையத்துல புகார் கொடுத்திருக்காங்க.
இதை எதிர்த்து குரல் கொடுக்க வந்த மாணவர்களையும் மிரட்டி வருகின்றனர். எல்லா உண்மையும் தெரிஞ்ச ஆசிரியர்கள் சிலர் இப்ப வரைக்கும் என்னானு கூட கேட்க வரல. நானும் எனது கணவரும் தனியா போராடிகிட்டு வரோம். இன்னும் 2 வாரத்தில எனக்கு குழந்தை பிறக்க இருக்கிறது. இந்த காலகட்டத்துல எந்த ஒரு பெண்ணும் தனது கணவர் கூட இருக்கணும்னு ஆசப்படுவா, ஆனா இப்போ எனது கணவர் என் கூட இல்லாம 5 வயசுல குழந்தைய வச்சிக்கிட்டு தவிச்சுகிட்டு இருக்கேன். எனக்கு எதாவது நீதி கிடைக்கனும்னு நீங்க நெனச்சிங்கனா உரிய விசாரணையின் பேருல இந்த புகாரை ரத்து செய்யனும்னு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறுகிறார்.