உத்தரப் பிரதேச மாநில சிறைகளில் ‘மகா மிருத்யுஞ்சய் மந்திரம்’ மற்றும் ‘காயத்ரி மந்திரம்’ ஒலிப்பதிவுகளை இசைக்கும்படி அனைத்து சிறை நிர்வாகங்களுக்கும் அம்மாநில சிறைத்துறை அமைச்சர் தரம்வீர் பிரஜாபதி உத்தரவிட்டுள்ளார்.
சிறைகளில் இந்த மந்திரங்களை இசைப்பதன் மூலம் கைதிகளுக்கு மன அமைதி கிடைக்கும் என்றும், இந்த மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் சிறைகளின் சுற்றுச்சூழல் மேம்படுவதுடன், குற்றவாளிகளின் மன பதற்றம் தணியும் என்றும் அமைச்சர் தரம்வீர் பிரஜாபதி தெரிவித்தார். இதனால் குற்றவாளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களாக சிறையில் இருந்து வெளியேற உதவும் என்றும் அவர் கூறினார்.
(கோப்பு புகைப்படம்)
சிறைகளில் பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ள அமைச்சர், பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் மாற்று வழிகளைத் தேடுமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறார். மேலும், அபராதம் செலுத்தாததால் நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்பட்ட குற்றவாளிகள் 135 பேரையும் மாநிலத்தில் உள்ள பல சிறைகளில் இருந்து விடுவிக்கவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிறைத்துறைக்கு எதிரான புகார்களைத் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்ணை ஏற்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் சிறைத்துறை அமைச்சர் தர்மவீர் பிரஜாபதி தெரிவித்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM