புதுடெல்லி: உத்தரப் பிரதேசம் கிரேட்டர் நொய்டாவில் 2000, 5000 ரூபாய் நோட்டுகளுக்கு சில்லறை மாற்றும் பெயரில் நூதனத் திருட்டு நடைபெற்றுள்ளது. இந்த வழக்கில் கூடுதல் துணை ஆணையர் தமிழரான ஐபிஎஸ் அதிகாரி இளமாறன் தலைமையிலான படை ரூ.25 லட்சம் மீட்டுள்ளது.
கிரேட்டர் நொய்டாவின் மேற்குப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அர்விந்த் குமார், ஹர்ஷத் எனும் மஹேஷ் மற்றும் பவண் குமார். இவர்களில் பவண் குமார் மட்டும் குஜராத்தைச் சேர்ந்தவர், இதர இருவரும் உபி.,வாசிகள்.இந்த மூவரும் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க முயல்பவர்களை குறிவைத்து பின்தொடர்ந்துள்ளனர். பிறகு அவர்களிடம் ரூ.2000, ரூ.500 முக மதிப்பு நோட்டுகள் மாற்றினால் கூடுதல் தொகை அளிப்பதாகக் கூறி மோசடி செய்துள்ளனர். இவர்களிடம் உ.பி.,யின் கிரேட்டர் நொய்டாவாசியான ரோஹித் குமார் ஏமாந்துள்ளார். இவரிடம் சில்லறை நோட்டுகளுக்கு பத்து சதவிகிதம் கூடுதலாக 500, 2,000 நோட்டுகள் அளிப்பதாக பவணும், அர்விந்தும் ஆசை காட்டியுள்ளனர்.
தாம் பேசியபடி, துவக்கத்தில் ரூ.50,000 பிறகு, ரூ.1 லட்சம் என பொது இடத்தில் அழைத்து பைகளில் கொடுத்து ரூ.10, 20, ரூ.50 என்ற சில்லறை நோட்டுகளை மாற்றியுள்ளனர். இதன் பிறகு ரோஹித்திற்கு நம்பிக்கை வளர்ந்ததும், அதிக லட்சங்கள் அளித்தால் அதிக தொகை கிடைக்கும் எனவும் ஆசைக் காட்டியுள்ளனர்.இதை நம்பி ரோஹித் அளித்த ரூ.20 லட்சத்திற்கு மாற்றாக வெறும் காகித நோட்டுகளை கொடுத்து விட்டு தலைமறைவாகி விட்டனர். மூவரின் மீதும் தம் பகுதியிலுள்ள பிஸ்ரக் காவல்நிலையத்தில் ரோஹித் 3 தினங்களுக்கு முன் புகார் அளித்துள்ளார். இது நூதனை திருட்டாக இருப்பதால், தனது தலைமையில் அதற்காக தனிப்படை அமைத்தார் நொய்டா காவல்துறையின் கூடுதல் துணை ஆணையரான டாக்டர்.ஜி.இளமாறன்.ஐபிஎஸ். இதில், அடுத்த 24 மணிநேரத்தில் குற்றவாளிகளை கைது செய்ததுடன் ஏமாற்றப்பட்ட முழுத்தொகையான ரூ.25 லட்சங்களும் மீட்கப்பட்டுள்ளன.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் மன்னார்குடி தமிழரான டாக்டர்.ஜி.இளமாறன் கூறும்போது, ”இந்த பணமாற்றத்தை பெரிய நோட்டுகள் பெற்றுக் கொண்டு குறிப்பிட்ட சில மணிநேரங்களுக்கு பிறகு சில்லறை நோட்டுகள் அளிக்கப்பட்டுள்ளது.
தொடக்கத்தில் பேசியபடி, குறித்த நேரங்களில் தொகையை அளித்து நம்பிக்கையை வளர்த்துள்ளனர். பிறகு பெரியதொகை கைக்கு வந்த பின் வெறும் காகிதக்கட்டுகளை பைகளில் போட்டுக் கொடுத்து விட்டு தலைமறைவாகினர். பள்ளிப் படிப்பையும் பாதியில் முடித்த இவர்களது நூதனத் திருட்டை, அதிகம் படித்தவர்களாகப் பார்த்து இப்பகுதியில் முதன்முறையாக நடத்தி உள்ளனர். இவர்கள் வேறு பகுதிகளிலும் இதுபோல் செய்துள்ளனரா? என விசாரணை நடைபெற்று வருகிறது.”எனத் தெரிவித்தார்.
விவசாயக் குடும்பத்தை சேர்ந்த இளமாறன் 2016 இல் ஐபிஎஸ் பெற்ற, சென்னை கால்நடை மருத்துவப் பல்கலைகழகத்தின் பட்டதாரி ஆவார்.