ஜம்மு காஷ்மீரில் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து மத்திய ஏஜென்சியின் விசாரணையை வரவேற்றுள்ள மேகாலயா ஆளுநர் சத்ய பால் மாலிக், தான் ஜம்மு காஷ்மீர் ஆளுநராக இருந்தபோது இரண்டு கோப்புகளுக்காக 300 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக பிரதமர் நரேந்திர மோடியிடம் கூறியதாக தெரிவித்துள்ளார். ‘ஊழலில் சமரசம் செய்து கொள்ளக் கூடாது என்று பிரதமர் என்னை ஆதரித்தார்’ எனவும் அவர் கூறினார்.
இந்த புகார் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் விசாரணையை கோரிய நிலையில், சத்ய பால் மாலிக் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து சிபிஐ கடந்த மாத இறுதியில் விசாரணையைத் தொடங்கியது.
“ஜம்மு காஷ்மீரில் ஆளுநராக இருந்தபோது இரண்டு கோப்புகள் என் பரிசீலனைக்கு வந்திருந்தன. இவற்றை அனுமதித்தால் ஒவ்வொன்றிற்கும் 150 கோடி ரூபாய் கிடைக்கும் என்று ஒரு செயலர் என்னிடம் கூறினார். ஐந்து குர்தா பைஜாமாக்களை காஷ்மீருக்குக் கொண்டு வந்துள்ளேன், அவற்றுடனே திரும்பிச் செல்வேன் என்று கூறி அந்த வாய்ப்பை நிராகரித்தேன்” என்று கடந்த ஆண்டு அக்டோபர் 17 அன்று ராஜஸ்தானின் ஜுன்ஜுனுவில் நடந்த ஒரு விழாவில் சத்ய பால் மாலிக் கூறினார்.
பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர்களால் இந்த லஞ்சம் வழங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது எனவும், ஒன்று ஆர்எஸ்எஸ்ஸுடனும், மற்றொன்று இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் ஒருவருடனும் தொடர்புடையது என்றும் அவர் கூறினார். மேலும், தனக்கு நேரடியாக லஞ்சம் வழங்கப்படவில்லை என்றும், ஆனால் சம்பந்தப்பட்ட அனைவரையும் அறிந்திருப்பதாகவும் கூறினார். விசாரணையின் போது அவர்களின் பெயர்களை வெளியிடுவேன் என்றும் அவர் கூறினார்.
அரசாங்கத்திற்கு எதிரான விவசாயிகள் போராட்டங்களை பகிரங்கமாக ஆதரித்ததால் குறிவைக்கப்படுகிறார் என்ற ஊகத்திற்கு பதிலளித்த மாலிக், “சிபிஐ விசாரணைக்கு தயாராக இருக்கிறேன், விசாரணைக்கு உதவ கூடுதல் தகவல்களை வழங்குவேன். நான் பயப்படவில்லை, விவசாயிகளுக்காக தொடர்ந்து குரல் எழுப்புவேன், போராடுவேன்,” என்று கூறினார்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM