சென்னை : “எனக்கும் இந்தி தெரியாது” என்று பாஜக உறுப்பினர் உமா ஆனந்தன் பேச்சால் சென்னை மாநகராட்சி மாமன்றத்தில் சிரிப்பலை எழுந்தது.
சென்னை மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் பேசிய பாஜக உறுப்பினர் உமா ஆனந்த், “நமஸ்காரம். ஆங்கிலம், தமிழ் இரு மொழிகள் கலந்து நான் பேசுவேன் மன்னித்து விடுங்கள்” என்று தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட திமுக உறுப்பினர்கள் இந்தியில் மட்டும் பேசிவிட வேண்டாம் என்று தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்த அவர் “எனக்கும் இந்தி தெரியாது” என்று தெரிவித்தார். இதைக் கேட்ட திமுக உறுப்பினர்கள் கைதட்டி சிரிப்போடு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
முன்னதாக டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக இந்தியை அலுவல் மொழியாக மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்தியாவின் மொழியான இந்தியை வெவ்வேறு மாநிலங்களில் உள்ள குடிமக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள பயன்படுத்த வேண்டும்.
இந்தியைத்தான் ஆங்கிலத்துக்கு மாற்றாகக் கருத வேண்டும். உள்ளூர் மொழிகளை அல்ல. இந்தியாவில் தேசிய மொழி இல்லை என்றாலும், இந்திதான் நாட்டின் அதிகாரபூர்வ மொழியாகும். ஆட்சியை நடத்த இந்திதான் தொடர்பு மொழியாக இருக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார்.
அமைச்சரவையின் 70% நிகழ்ச்சி நிரல்கள் இனி இந்தியில் தான் தயாராகும். இனி வரும் நாட்களில் வடகிழக்கு மாநிலங்களிலும் 10 ஆம் வகுப்பு வரை இந்தி கட்டாயமாக்கப்படும். மாணவர்கள் இந்தி மொழித் தேர்வுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்” என்று பேசியிருந்தார்.
இதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி அரசியல் கட்சித் தலைவர்கள் வரை பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இன்று சென்னை மாநகராட்சி பட்ஜெட்டிலும், இதன் நீட்சியாக இந்தி மொழி வேண்டாம் என திமுக கவுன்சிலர்கள் கூறியதும், இந்தி தெரியாது என பாஜகவின் ஒற்றைக் கவுன்சிலர் கூறியதும் பேசுபொருளாகியுள்ளது.