அரசாங்க நிதியை சரிசெய்வதற்காக அடுத்த ஆறு மாதங்களிற்குள் மீண்டும் எரிபொருள் விலைகளை அதிகரிக்க வேண்டியிருக்கும், என நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சராக பதவி ஏற்றதன் பின்னர் ரொய்ட்டர்ஸ் செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணலில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
எரிபொருள் மருந்துகள் உட்பட அத்தியாவசியபொருட்களை பெறுவதற்கும் பொருளாதார நெருக்கடியை கையாள்வதற்கும் இலங்கைக்கு 3 பில்லியன் டொலர் வெளிநாட்டு உதவி அடுத்த ஆறு மாதங்களிற்கு தேவைப்படும்.
இந்தியாவிடமிருந்து எரிபொருளிற்காக மேலும் 500 மில்லியன் டொலர்களை இலங்கை கோரும். இது ஐந்து வார தேவைகளை பூர்த்தி செய்வதற்கு போதுமானதாக காணப்படும். ஆசிய அபிவிருத்தி வங்கி உலக வங்கி நட்புநாடுகளிடமும் அரசாங்கம் உதவியை நாடும்.
நாங்கள் எங்கிருக்கின்றோம் என்னநிலையில் இருக்கின்றோம் என்பது தெரியும். இந்த நிலைமைக்கு எதிராக போராடுவதை தவிர வேறு வழியில்லை.
அரசாங்க நிதியை சரிசெய்வதற்காக
வரிகளை அதிகரிக்கவேண்டியிருக்கும், அடுத்த ஆறு மாதங்களிற்குள் மீண்டும் எரிபொருள் விலைகளை அதிகரிக்கவேண்டியிருக்கும், இந்த நடவடிக்கைகளிற்கு மக்கள் ஆதரவளிக்கப்போவதில்லை ஆனால் நாடு தற்போதைய நிலையிலிருந்து மீள்வதற்கு இதனை செய்தே ஆகவேண்டும், நீங்கள் இதனை செய்யவேண்டும் அல்லது நிரந்தரமாக தோல்வியை தழுவவேண்டும் இது எங்கள் முன்னால் உள்ள தெரிவு என குறிப்பிட்டுள்ளார்.