இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்ற தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர்
தமிழிசை சவுந்தரராஜன்
பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர்
அமித் ஷா
, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின் போது, புதுச்சேரி மாநில வளர்ச்சித் திட்டங்கள் குறித்து பல்வேறு கோரிக்கைகளை பிரதமரிடம் முன் வைத்துள்ளார். அதேபோல், தெலங்கானா மாநில அரசியல் சூழல், முதலமைச்சரின் நடவடிக்கை குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
தெலங்கானா மாநிலத்தில், முதலமைச்சர் சந்திரசேகரராவ் ஆளுநரை புறக்கணிப்பதாக கூறப்படுகிறது. அதன் வெளிபாடே கடந்த 6 மாத காலமாக ஆளுநர் பங்கேற்கும் விழாக்களில் கலந்துக்கொள்ளாமல் புறக்கணித்து வருகிறார். அதேபோல் ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சிகளும் கூட அமைச்சர்கள் கலந்துக்கொள்வதில்லை. இதனால் ஆளுநர்- ஆளும் அரசு இடையே விரோதப் போக்கு இருந்து வருகிறது.
இந்நிலையில், வரும் ஏப்.24-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதுச்சேரி வரவுள்ளதாகவும், புதுச்சேரியில் நடக்கவிருக்கும் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொள்ளவிருப்பதாகவும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட திட்டமிட்டுள்ளதால் முதலமைச்சர் என்.ஆர்.ரங்கசாமி அதிருப்தியில் இருப்பதாக பேசப்பட்டு வரும் நிலையில், அமித் ஷாவின் புதுச்சேரி வருகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.